14. தலைப்பில் இட்ட பாடலில் “தொல் கானம்” என்று ஆழ்வார் குறிக்கிறார். கானகமும் இந்தியாவும் தொன்மையானதுதான். பின் ஏன் தொல்கானம் என்று பிரித்தாள வேண்டுமெனில், ராமவதாரத்திற்கு முன்னே கூர்ம, மச்ச, வாமன அவதாரங்களால் பெருமாள் முன்பே இங்கு வந்துள்ளதால் இது அவருக்குத் தொல்கானமாயிற்று. சுற்றமெல்லாம் பின் தொடரவென்பது இராமன் காட்டிற்கு சென்றபோது பின்தொடர்ந்த மக்களைக் குறிப்பிடுவதன்று. அவனது சுற்றமான எப்போதும் ராமனைவிட்டு பிரியாத பிராட்டியான சீதா தேவியும், ஆதிசேடனான இலக்குவனப் பெருமாளை மட்டும் குறிப்பதாகும். அற்றவர்கட்கு அருமருந்தே என்பது பக்தியும், ஞானமும் அற்றவர்கள் என்ற பொருள் அல்ல, ராமனைவிட பிற தெய்வம் உண்டு என்ற ராம நினைவு அற்றவர்கட்கு என்பது பொருளாகும். அயோத்தி நகர்க்கதிபதியே என்றது அயோத்திக்கு மட்டும் மன்னராயிருந்ததை குறிப்பிடுவதன்று. அயோத்தி என்னும் பகுதியை வைகுந்தத்திலிருந்து கொடுத்தருளிய அதிபதி என்பது பொருளாகும். கற்றவர்கள் வாழும் கண்ணபுரமென்பது கல்வியிற் சிறந்தவர்கள் என்ற பொருள் மட்டுமல்ல, ராமகாதையை, ராமநாமத்தை ராமனைக் கற்றவர்கள் என்று பொருளாகும். கணபுரத்துக் கருமணியே என்றது திருக்கண்ணபுரத்து சௌரிராஜப் பெருமாளை மட்டும் குறிப்பிடுவதன்று. ரகுவம்சத்தின் மணிபோன்ற ராமனைக் குறிப்பதாகும். சிற்றவைதான் சொல்கொண்ட என்பதில் உள்ள சிற்றவை என்னும் சொல்லுக்கு சிற்றன்னை என்ற பொருள் மட்டுமன்று தன்குணத்தால் மிகச்சிறியவளாகிவிட்ட கைகேயி என்பதும் பொருளாகுமென்று பெரியோர்கள் அருள்வர். 15. இராமகாதையின் தாக்கம் இந்தியாவின் எண்ணற்ற இலக்கியங்களில் பிரதிபலிக்கிறது. தமிழிலக்கியம் பலவற்றில் இராமாயணம் இழைந்தோடுகிறது. சிலப்பதிகாரத்தில் இராமாயணத்தின் தாக்கம் அதிகம் என்றும், சிலம்பு பயந்த இளங்கோவடிகள் பல மதக் கருத்துக்களையும் தம் நூலில் கூறிப்போந்துள்ளாரெனினும் வைணவ கருத்துக்களையும், இராம காதையின் நிகழ்ச்சிகளையும் அதிகமாக எடுத்தாண்டுள்ளார் |