பக்கம் எண் :

594

என்பதை சிலம்பைக் கற்றவர்கள் யாரும் மறுத்துவிட முடியாது. உதாரணத்திற்கு
ஒன்றைச் சொல்வோம்.

     கோவலன் புகார் நகரைவிட்டுப் பிரிந்து செய்திக்கு உவமானம் கூறவந்த
இளங்கோவடிகள் ராமன் அயோத்தியை விட்டுப் பிரிந்ததை நினைவு கூர்கிறார்.
ராமன் அயோத்தியை விட்டுப் பிரியும்போது மக்கள் எவ்வாறு அலமந்தனரோ
அதுபோல் புகார் நகரத்தினர் துயருள்ளாயினர் என்கிறார்.
 

     பெருமகன் ஏவல் அல்லது யாங்கனும்
          அரசே தஞ்சமென் றருங்கான் அடைந்த
     அருந்திறல் பிரிந்த அயோத்தி போல
          பெரும் பெயர் மூதூர் பெரும் பேதுற்றதும்
                                   -என்கிறார்

     கண்ணகி காவியத்தை ராமனைப் பற்றிச் சொல்லித்தான் நிறைவேற்ற
வேண்டுமென்பதில்லை. ராமகாதையில் இளங்கோவடிக்கு இருந்த ஈடுபாடு தன்
காவியத்தில் ராம நிகழ்ச்சியைப் புகுத்த வேண்டுமென்ற தாக்கம்
இவ்வுவமானமாக மிளிர்ந்தது.

     அதேபோல் கோவலன் புகாரை விடுத்து மதுரை நோக்கி வரும்
வழியில் “அறியா தேயத்து ஆரிடை உய்ந்து சிறுமையுற்றேன்” என்று
கோவலன் வருந்தியபோது அவனுக்கு ஆறுதல்மொழி பகர்ந்த கவுந்தி அடிகள்.
 

     தாதை ஏவலின் மாதுடன் போகி
          காதலி நீங்க கடுந்துயர் உழந்தோன்
     வேத முதல்வ பயந்தோன் என்பது
          நீயறிந்திலையோ நெடுமொழியன்றோ - என்கிறார்.

     தந்தையின் கட்டளைப்படி வனமேகிய ராமன் சீதையைப் பரிந்து
கடுந்துயறுற்றதை நீ அறியவில்லையா உலகோ ரனைவரும் அறிந்த நெடு
மொழியல்லவா? அது என்று கூறி கோவலனைத் தேற்றுகிறார்.

     இந்த அளவிற்கு, அதாவது ராமனைப் பற்றிச் சொல்ல வேண்டும்,
சொல்ல வேண்டுமென்ற அளவிற்கு ராமகாதையில் இளங்கோவடிகளின்
உள்ளம் தோய்ந்திருந்தது.