பக்கம் எண் :

596

97. திருநைமிசாரண்யம்

     வம்புலாங் கூந்தல் மனைவியைத் துறந்து
          பிறர்பொருள் தாரமிவற்றை
     நம்பினாரிறந்தால் நமன்றமர் பற்றி
          எற்றிவைத்து எரியெழுகின்ற
     செம்பினாலியன்ற பாவையைப் பாவீ
          தழுவென மொழிவதற்கஞ்சி
     நம்பனே வந்துன் திருவடியடைந்தேன்
          நைமிசா ரண்யத்து ளெந்தாய் (1001)
                      பெரிய திருமொழி 1-6-4

     தனது மனையாளை விடுத்து பிறன் மனைவியையும், பிறரது
பொருளையும் விரும்புகின்றவர் இறந்துபட்டால் அப்பாவம் செய்தமைக்காக
செம்பினால் செய்யப்பட்ட ஒரு பாவையை தீவைத்துக் கொளுத்தி இதைக்
கட்டித் தழுவு என்று எமனுலகில் தண்டனை வழங்குவர். எனவே அது
போன்ற கொடுமைகள் செய்வதற்கு நான் அஞ்சுவேன். நம்பினாரை ஒரு
போதும் கைவிடாத எம்பெருமானே நைமிசாரண்யத்தில் உள்ள உனது
திருவடியை வந்து அடைந்தேன்.

     என்று திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட இத்திருத்தலம் மேற்கு வங்க
மாநிலத்தில் உள்ளது. கல்கத்தா-டேராடூன் ரயில் மார்க்கத்தில் உள்ள
பாலமாவ் என்ற ஜங்ஷனில் இறங்கி பிறகு அங்கிருந்து சீதாப்பூர் செல்லும்
புகைவண்டியில் ஏறி நைமி சாரண்யம் ரயில் நிலையத்திலிறங்கி 1 1/2 மைல்
தொலைவு நடந்து சென்று இவ்விடத்தை அடையலாம்.

     பாலமாவ் என்ற இடத்திலிருந்து பேருந்து வசதியும் உள்ளது.

வரலாறு

     ஒரு சமயம் தவவலிமையில் சிறந்த முனிவர்கள் எல்லாம் ஒன்று கூடி 12
ஆண்டுகளில் செய்யக்கூடிய சத்திர வேள்வியைச் செய்ய விரும்பினர்.
அதற்குகந்த இடத்தை தெரிவு செய்து தருமாறு எல்லோரும் பிரம்மனிடம்
வேண்டினர். பிரம்மன் ஒரு தருப்பைப் புல்லை எடுத்து அதை ஒரு
வளையமாக வளைத்து கீழே உருட்டி அது எங்கு விழுகிறதோ அதுவே தவம்
செய்ய சிறந்த இடம் என்று தெரிவித்தான்.