பக்கம் எண் :

597

     இந்த பாரத தேசத்தில் அலகநந்தா நதி தீரத்தில் உள்ள இவ்விடத்தில்
வந்து விழுந்தது. இவ்விடமே தமது சத்திர வேள்வியைச் செய்ய உகந்தது
என்று முனிவர்கள் கண்டு தமது வேள்வியைத் தொடங்கினர்.

     நேமி என்ற சொல்லுக்கு சக்கரம் அல்லது சக்கரவளையம் என்பது
பொருள். நேமி சார்ந்த ஆரண்யம் ஆனதால் நேமிச ஆரண்யமாகி
நைமிசாரண்யம் ஆயிற்று.

     இதே கதை சில நூல்களில் பின்வருமாறு சொல்லப்படுகிறது.

     தீர்க்க ரோமர் என்ற மகரிஷியின் தலைமையில் பிரம்மனிடம் சென்ற
முனிவர்கள் சத்திர வேள்வியைத் துவக்கத் தகுதியான இடத்தைக்காட்டுமாறு
வேண்ட, பிரம்மன் அவர்களை ஒரு விமானத்தில் ஏற்றி இவ்வுலகை (பூவுலகை)
வலம் வருமாறும், அவ்வாறு வரும்போது விமானத்தின் நேமி, (சக்கரம்)
தானாக எவ்விடத்தில் கழன்று விழுகிறதோ அதுவே வேள்வியைத்துவக்க
சிறந்த இடமென்று கூறியனுப்ப விமானத்தின் சக்கரம் இவ்விடத்தில்
விழுந்ததாகவும் அதனால் இவ்விடம் நேமிச ஆரண்யம் ஆயிற்றென்றும்
கூறுவர்.

     எவ்வாறாயினும் நேமிசம் விழுந்த ஆரண்யம் அலகநந்தா நதி தீரத்தில்
உள்ள இந்த இடம்தான் என்பதில் ஐயமில்லை.

     வேள்வியை இவ்விடத்தில் துவங்கிய முனிவர்கள் அதன் முழுப்பலனை
மஹாவிஷ்ணுவிற்கே வழங்க எண்ணினர். அவ்விதமே மஹாவிஷ்ணு குறித்து
தவமியற்ற வேள்வியின் இறுதியில் அந்த வேள்வி குண்டத்திலேயே
எழுந்தருளி அவிர்ப்பாகம் ஏற்றுக்கொண்டு அம்முனிவர்கட்கெல்லாம்
எம்பெருமான் அருள்புரிந்து அவர்களை சாயுஜ்ய பதவிக்குரியனாக்கினார்
என்பது வரலாறு.

     இந்தக்கருத்தைப் பின்பற்றியே (அதாவது நைமிச ஆரண்யம் என்ற
கருத்தை) இங்குள்ள மக்களும் இறைவன் இங்கு ஆரண்ய ஸ்வரூபியாக
(காடுகளையே உருவமாய்) காட்டையே வணங்குகின்றனர். தற்போதுள்ள
சன்னதியிலும் ஆழ்வார் பாடிய மூர்த்திகள் இல்லை.

மூலவர்

     தேவராஜன் (ஸ்ரீஹரி) கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்

தாயார்

     ஸ்ரீஹரிலெட்சுமி