பக்கம் எண் :

599

98. திருப்பிரிதி

     கரிய மாமுகில் படலங்கள் கிடந்தவை
          முழங்கிட, களிரென்று
     பெரிய மாசுணம் வரையெனப் பெயர்தரு
          பிருதியெம் பெருமானை
     வரிகொள் வண்டறைப் பைம்பொழில் மங்கையர்
          கலியன தொலிமாலை
     அரிய வின்னிசை பாடு நல் லடியவர்க்
          கருவினை யடையாவே (967)
                      பெரிய திருமொழி 1-2-10

     மிகப்பெரிய மேகக்கூட்டங்கள் திண்டு திண்டாக, ஒன்றன் பின் ஒன்றாக
கர்ஜனை செய்து கொண்டு நகர்ந்து செல்கிறது. இதைக்கண்ட ஒரு மிகப்பெரிய
பாம்பானது ஒரு மலை ஊர்ந்து செல்கிறதோ என்றெண்ணி தன்
இருப்பிடத்தை விட்டு நகர்ந்து செல்ல ஆரம்பிக்கும். அப்பேர்ப்பட்ட
இடத்தில் அமைந்துள்ள திருப்பிரிதியில் சயனித்துள்ள எம்பெருமானைச்
சேவித்தவர்கட்கும் அந்தப்பெருமானைப் பற்றி என்னால் பாடப்பட்ட
பாக்களை இசையோடு பாடவல்லார்க்கும் தீயவினைகள் சேராது என்று
திருமங்கையாழ்வாரால் தொடக்க மங்களாசாசனம் செய்யப்பட்டது இத்தலம்.
இமயமலைக்கு வடபுறத்தில் மலைகளும் குன்றுகளும் சூழ்ந்த எல்லையற்ற
அழகுள்ள இடத்தில் எங்கோ அமைந்துள்ளது. அல்லது அமைந்திருந்தது
என்றும் சொல்லலாம். ஏனெனில் இத்தலம் எங்கிருந்தது என்று அறுதியிட்டுச்
சொல்ல முடியாததால் இதனைச் சேவிக்க இயலாது.

மூலவர்

     பரமபுருஷன், புஜங்க சயனம், கிழக்கு நோக்கிய திருக்கோலம்.

தாயார்

     பரிமளவல்லி நாச்சியார்

விமானம்

     கோவர்த்தன விமானம்

தீர்த்தம்

     இந்திர தீர்த்தம், கோவர்த்தன தீர்த்தம், மானஸரோவஸ்