பிறகு பத்ரியை மங்களாசாசனம் செய்கிறார். (எனவே ஜோஷி மடமே திருப்பிரிதியாக இருந்தால் ஆழ்வார் பத்ரியை மங்களாசாசனம் செய்திருக்க மாட்டார்) ஆ) திருமங்கையாழ்வாரும், மற்றும் பிற ஆழ்வார்களும் தாம் மங்களாசாசனம் செய்யும் திவ்ய தேசத்தின் மருங்கமைந்த இயற்கை காட்சிகளை தம் பாடல்களில் மறவாது குறிப்பிடுவர். உதாரணமாக திருவரங்கத்தைப் பாடும் பாக்கள் பலவற்றில் ஆழ்வார் காவிரியைக் குறித்துள்ளார். கங்கை கரையில் உள்ள வதரியச்சிரமத்தை பாடும் போது முதல் ஒன்பது பாசுரங்களிலும் ஈற்றடியில் கங்கையின் கரைமேல் வதரியாச் சிரமத்துள்ளானே என்று முத்திரை பொறிக்கிறார். இதே போல் கண்டமென்னும் கடிநகர்ப் பதிகப் பாசுரம் ஒவ்வொன்றிலும் அந்த நகர் கங்கை கரையில் உள்ளதென்பதை உணர்த்தியுள்ளார். கங்கைக் கரையின் மேலுள்ள ஜோஷி மடமே திருப்பிரிதியாகில் திருப்பிரிதிப் பதிகப் பாசுரம் ஒன்றிலாவது கங்கையைப் பற்றிச் சொல்லி இருக்கவேண்டும். கங்கை பெருகி ஓடும் நதி. திருப்பிரிதி பாசுரத்தில் தடஞ்சுனைகளையும், அருவிகளையும் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்கிறார். இவைகள் கங்கைகரையில் இல்லை. ரிஷிகேசத்திலிருந்து வதரி வரை செல்லும் பாதையை ஒட்டியே கங்கை பாய்கின்றது. திருப்பிரிதிக்கு கங்கையின் சம்பந்தத்தை திருமங்கையாழ்வார் சொல்லாமல் இருப்பதிலிருந்தே திருப்பிரிதியானது கங்கையின் உற்பத்தி ஸ்தானங்களையெல்லாம் தாண்டி வதரிக்கு மிகவும் வடக்கே இருந்திருக்க வேண்டும் என்று காட்டும் முக்கியமான அகச் சான்றாகும். இ) திருமங்கையாழ்வார் திருப்பிரிதிக்கு இட்டருளிய பாசுரங்களில் எல்லாம் இமயத்துள் என்று இந்த திவ்ய தேசத்தைக் குறிக்கிறார். இமயத்துள் என்னும் பதத்தாலே இமயத்தின் நடுவில் இருப்பதே திருப்பிரிதி என உணர்த்துவதன் |