திருப்பிரிதியை இவ்வண்ணம் பாடியிருக்கும் திருமங்கையாழ்வார், வதரியைப் பற்றிப் பாடும்பொழுது ஒரு பாசுரத்திலாவது துஷ்ட மிருகங்கள் இருப்பதைப்பற்றிப் பாடவில்லை பாரோர் புகழும் வதரியென்று திருமங்கையாழ்வார் காலத்திலேயே ஆயிரக்கணக்கான ஜனங்கள் வருடந்தோறும் வதரி சென்று வந்திருக்கிறார்களாகையாலே துஷ்ட மிருகங்கள் சஞ்சரித்திருக்க முடியாது. ஆகவே சிங்கம், புலி, மலையரவு ஆகிய துஷ்ட ஜந்துக்கள் வாழுமிடமாய் பாடப்படும் திருப்பிரிதி வதரிக்கு 20 மைல் தெற்கே உள்ள ஜோஷி மடமாக இருக்கவே முடியாது. ஜோஷி மடம் பிரிதியாய் இருக்க முடியா தென்பதற்கும் அடர்ந்த காட்டுப் பிரதேசமொன்றில் அமைந்தது திருப்பிரிதி என்பதற்கும் இது முக்கியமான அகச்சான்றாகும். இந்த அகச்சான்றுகள் போக, சில புறச்சான்றுகளையும் இனி காண்போம். (உ) பெரியவாச்சான் பிள்ளையின் திருமொழி வ்யாக்யானமே முக்கியமான புறச்சான்றாகையால் அதை முதலில் ஆராய்வோம். பேராசிரியரான பெரியவாச்சான் பிள்ளையின் காலம் சுமார் 700 ஆண்டுகட்கு முற்பட்டதாகும். அக்காலத்தில் திருவரங்கமும் திருப்புல்லாணியும் எங்கேயுள்ளதென்பது எவ்வளவு பிரசித்தமாயிருந்ததோ அவ்வளவு பிரசித்தமாயிருந் திருக்கும். திருப்பிரிதியின் ஸ்தானமும். ஆகையால் திருப்பிரிதியின் ஸ்தானத்தை நிர்ணயிப்பதில் ஆழ்வார் பாசுரத்திற்கு உள்ள பலம் ஆச்சான் பிள்ளையின் வியாக்கியானத்திற்கும் உண்டென்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். பரமகாருணிகரான பெரிய வாச்சான்பிள்ளை வாலி மாவலத்து என்று தொடங்கும் திருப்பிரிதி திருமொழியின் பிரவேசத்தில் இப்படி ஸௌலப்யத்திற்கு எல்லையான உகந்தருளின நிலமெங்கும் புக்கு அனுபவிக்க கோலி அதில் இப்பாஷை நடையாடுமிடத்துக்கு எல்லையாயிருக்குமிறே திருமலை. அவ்வளவில் |