நில்லாதிறே இவருடைய ஆசையானது. ஆகையால் உகந்தருளின நிலங்கட்கு எல்லையான ஹிமாவானில் திருப்பிரிதியளவும் சென்று அவ்விடத்தை அனுபவித்ததாகத் திருவுள்ளத்தோடே காட்டுகிறார். என்று அருளிச் செய்கிறார். திருவேங்கிடம் எப்படித் தமிழ்நாட்டிற்கு எல்லையோ (இங்கு பெரிய வாச்சான் பிள்ளை அதில் இப்பாஷை என்றது தமிழ் மொழியினை) அதுபோல உகந்தருளிய நிலங்களுக்கெல்லாம் எல்லையாயிருப்பது திருப்பிரிதி என்று அருளியிருப்பது மற்ற திவ்யதேசங்கள் அனைத்திலும் வடக்கே இருப்பது என்று ஐயந்திரிபறக் காட்டுகிறது. ஊ) நாலாயிரத் திவ்ய பிரபந்தங்களின் பழைய பதிப்புகளிலும் நூற்றெட்டுத் திருப்பதிகளைப் பற்றியும் அங்குள்ள கோயில், விமானம், தீர்த்தம், பெருமாள் திருக்கோலம் பற்றியும் பல விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வடநாட்டு திவ்ய தேசங்கள் பலவற்றில் முஸ்லீம்கள் படையெடுப்பால் பல சன்னதிகள் சிதிலமடைந்தன. எனவே வடநாட்டு ஸ்தலங்கள் பலவற்றில் நூல்களில் உள்ள அட்டவணையில் கண்டுள்ள விபரப்படியுள்ள சன்னதிகள் காணப்படுவதில்லை. ஆனால் இமய மலைப் பிரதேசத்தில் முஸ்லீம் படையெடுப்பு இல்லாமையால் ஸ்ரீபதரியிலும், கண்ட மென்னும் கடி நகரிலும், இவ்விபரத்தில் கண்டபடியே சன்னதிகள் உள்ளன. ஜோஷி மடத்தில் திருப்பிரிதியின் லட்சணத்தை உடைய சன்னதியோ, விமானமோ, தீர்த்தமோ, திருக்கோலமோ எதுவுமில்லை. திருப்பிரிதியைப் பற்றி இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்கள். பெருமாள் பரமபுருஷன், கிழக்கே திருமுகம், புஜங்க சயனம், பார்வதிக்குப் பிரதயட்சம். தாயார் பரிமளவல்லி நாச்சியார் |