பக்கம் எண் :

616

நாதனைக் குறித்து நாரதர் அஷ்டாச்சர மந்திரத்தால் ஜபம் செய்து மஹா
விஷ்ணுவின் அருள்பெற்றார் என்னும் ஓர் வரலாறும் உண்டு.

     5. பத்ரிநாத் செல்லும் வழியில் ஹனுமான் கட்டி என்ற ஓர் இடம்
உள்ளது. இங்கு பீமனும் அனுமனும் சண்டையிட்டதாகக் கூறுவர். ஹனுமான்
கட்டியைத் தாண்டி சுமார் 4 கி.மீ. சென்றதும் பத்ரிகாஸ்ரமம் காட்சி தரும்.

     6. பத்ரிநாராயணன் ஆலயத்திற்கு எதிரில் தப்த குண்டம் என்னும்
தீர்த்தம் உள்ளது. இது ஒரு வெந்நீர் ஊற்றாகும். தப்த குண்டத்தில்
நீராடிவிட்டு சில படிகள் ஏறிச்சென்றதும் கருடாழ்வார் நமக்கு காட்சி
தருகிறார். கருடாழ்வாரைத் தரிசித்துவிட்டுத் தான் பத்ரிநாராயணன்
ஆலயத்திற்குச் செல்ல வேண்டும். இங்கு பத்ரி நாராயணன், கருடாழ்வார்,
நாரதர், நாராயணன் முதலானோர் மிக்க பேரெழில் பொங்க
வீற்றிருக்கின்றனர்.

     7. இங்கு பெருமாள் சாளக்கிராம மூர்த்தியாக (ஸாளக்கிராமச் சிலையாக)
எழுந்தருளியுள்ளார்.

     8. இங்கு பெருமாளுக்கு நடைபெறும் சகல விதமான பூஜைகளும்
(திருமஞ்சனம்) திருவாராதனம், சாத்துமரை மக்களுக்கு எதிரிலேயே
நடைபெறுகின்றன. திரைபோடுவது இல்லை. இங்கு நடைபெறும்
பூஜாமுறைகளை பக்தர்கள் நேருக்கு நேர் நின்று காணலாம்.

     9. இங்கு இரவில் பெருமாளுக்கு சாந்தி பஞ்சகம் என்னும் பூஜை
நடைபெறும். இந்த பூஜைக்குரிய மந்திரங்களை வடநாட்டு பிராம்மணரே
ஓதுவர். அப்போது எம்பெருமானின் ஆடைகளையும், மாலைகளையும்
கலைவர். இந்த நிகழ்ச்சிக்கு கேரள தேசத்து நம்பூதிரிகளே தலைமை
அர்ச்சகராக இருந்து செயல்படுவர். இவ்வாறு எம்பெருமானின் ஆடைகள்
மற்றும் மாலைகளை களைந்துவிட்டு சிறிய துண்டு ஒன்றை அணிவிப்பர்.
இந்நிகழ்ச்சிக்கு கீதகோவிந்தம் என்று பெயர். மிகவும் நல்லொழுக்கம் வாய்க்கப்
பெற்றவர்களும், சாஸ்திரங்களிலும், சமஸ்கிருதத்திலும் மிக்க தேர்ச்சி பெற்ற
பிராம்மணர்களே இந்த நிகழ்ச்சிக்கு குழுவினராக நியமிக்கப்படுவர். இந்த
பூஜை நடைபெறும் சமயம் பெருமாளின் பக்கத்தில் அமர்ந்தே பூஜை
நிகழ்ச்சிகளை பக்தர்கள் தரிசிக்க முடியும். இதற்குத் தனிக் கட்டணம் உண்டு.