பக்கம் எண் :

617

     10. இங்கு கோவிலின் வடபுறம் கங்கை கரையில் பிரம்ம கபாலம்
என்னும் ஒரு இடம் உள்ளது. இங்குள்ள ஒரு பெரிய பாறையில்
பித்ருக்களுக்கு சிரார்த்தம் செய்யப்படுகிறது. இவ்விடத்தில் சிரார்த்தம்
செய்தால் நம் முன்னோர்களின் அனைத்து தலைமுறையினர்க்கும் மோட்சம்
கிடைப்பதாகவும், அதற்குப் பிறகு சிரார்த்தம் செய்ய வேண்டியதில்லை
என்பதும் ஐதீஹம்.

     11. இங்கு இராமானுஜருக்கும், சுவாமி தேசிகனுக்கும் தனித்தனியே
சன்னதிகள் உள்ளன.

     12. இங்கு அமைந்துள்ள வசுதரா என்ற பனிமலையில் நீர்வீழ்ச்சி ஒன்று
உள்ளது. இந்த நீர் வீழ்ச்சியின் பனித்திவலைகள் மிகவும் புனிதம் வாய்ந்தவை
என்றும், இவைகள் மேனியில் படுதலால் புனிதம் உண்டாகிறதென்றும்
நம்பிக்கை. இங்கு யாத்திரை செல்வோர் இந்த திவலைகளில் குளித்து வருவர்.

     13. எல்லையற்ற பெருமைகொண்ட இத்தலத்திற்கு விசாலபுரி என்ற
பெயரும் உண்டு. பாண்டவர்களின் அவதாரஸ்தலம் இதுதான் என்று ஒரு
கருத்தும் உண்டு.

     14. இத்தலம் 6 மாதங்களுக்கு மட்டுமே பக்தர்களின் தரிசனத்திற்குத்
திறந்துவிடப்படும். அதாவது குளிர் காலமான 6 மாதத்தில் விடாது பனிபெய்து
இத்தலத்தையே மூடுமளவிற்கு வருவதால் குளிர்காலமான 6 மாதத்திற்கு
இத்தலம் மூடப்பட்டு சித்திரை மாதம் சித்ரா பௌர்ணமியன்று மீண்டும்
திறக்கப்படும். பூட்டப்பட்ட 6 மாதத்தில் தினந்தோறும் இரவில் தேவர்கள்
இங்கு வந்து பாரிஜாத மலர்களால் எம்பெருமானை அர்ச்சிப்பதாகக் கூறுவர்.
அதாவது பனிக்காலத்தில் கோவிலை அடைத்து விட்டு 6 மாதங்கழித்து திறந்து
பார்க்கும்போது முதல்நாள் இரவில் பெருமாளுக்குச் சூட்டிய மலர் மாலைகள்
மறுநாள் காலையில் பார்த்தால் எந்த அளவுக்கு லேசாக வாடியிருக்குமோ
அந்த அளவிற்குத்தான் மலர்களின் வாட்டம் இருக்குமாம். அதனால் தான்
மூடப்பட்ட 6 மாத காலமும் தேவர்கள் வழிபட்டுச் செல்கின்றனர் என்னும்
ஐதீஹம் உண்டானது.

     15. மே மற்றும் ஜூன் மாதங்களே இந்த யாத்திரைக்கு மிகவும்
உகந்ததாகும்.

     16. பெரியாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் 22 பாசுரங்களில்
இப்பெருமானை மங்களாசாசனம் செய்துள்ளார்கள்.