பக்கம் எண் :

618

101. திருச்சாளக்கிராமம் (ஸாளக்கிராவா)

     பாலைக் கறந்தடுப் பேற வைத்துப்
          பல்வளையா ளென் மகளிருப்ப
     மேலையயுகத்தே நெருப்பு வேண்டிச்
          சென்றிறைப் பொழுதங்கே பேசி நின்றேன்
     சாளக்கிராம முடைய நம்பி
          சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான்
     ஆலைக் கரும்பின் மொழியனைய
          அசோதை நங்காய் உன் மகனைக் கூவாய் (206)
                       பெரியாழ்வார் திருமொழி 2-9-5

     ஏ, அசோதைப் பெண்ணே, என் மகள் பால் கறந்து வந்தாள். அதைப்
பாத்திரத்திலிட்டு அடுப்பிலேற்றி வைத்தாள். அடுப்பைப் பற்றவைக்க மேற்குப்
பக்கத்தே உள்ள ஒரு வீட்டிற்கு நெருப்பு வாங்கச் சென்றேன். அந்த வீட்டின்
கோபிகைகளோடு கொஞ்ச நேரம் (ஒரு இமைப்பொழுது) பேசிவிட்டு வந்தேன்.
இதற்குள் உன் கோலக் கரிமுகத்துச் செங்கண்ணன் வந்து என் மகளுக்கும்
தெரியாதவாறு உள்ளே சென்று அடுப்பின் மேல் பாத்திரத்திலிருந்த
பாலையெல்லாம் குடித்துவிட்டு ஓடியே போய்விட்டான். அவனை நீ
கூப்பிடமாட்டாயோ உன் பிள்ளையைக் கூவி உன் இல்லத்திலேயே இருத்திக்
கொள் என்று கண்ணனின் குறும்புகளை ஒரு தாய் யசோதை நங்கையிடம்
முறையிடுகிறாள். இந்தக் கண்ணபிரான்தான் சாளக்கிராமத்தில் உள்ளான் என்று
பெரியாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம், நேபாளம்
காட்மண்டு பகுதியில் அமைந்துள்ள கண்டகி நதி பிராந்தியத்தில் உள்ளது.
அதாவது கண்டகி நதி முழுவதுமே சாளக்கிராமப் பகுதியாகும். நேபாளத்தின்
தலைநகரான காட்மண்டு நகரிலிருந்து 170 மைல் தூரத்தில் கண்டகி நதிக்
கரையில் அமைந்துள்ளது. இங்கிருந்து 15 மைல் தூரத்தில் முக்தி நாராயண
சேத்திரம் உள்ளது. இந்த முக்தி நாராயண சேத்திரமே சாளக்கிராமம் என்று
சொல்வாருமுண்டு.

வரலாறு

     இத்தலம் பற்றி வடநூல்கள் பலவற்றிலும் பேசப்பட்டுள்ளது.
தென்னாட்டு நூல்களில் சில குறிப்பிட்ட குறிப்புக்களே கிடைக்கின்றன.