12. சாளக்கிராமத்தின் வயது பல கோடி ஆண்டுகள் என்பது நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. 13. சாளக்கிராமங்கள் அறிவியல் நோக்கில் அம்மோனைட் (AMMONITES) என்ற வகையைச் சார்ந்த கற்படிவம் ஆகும். ஏறத்தாழ 7 கோடியிலிருந்து 20 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இடை ஊழிக்காலத்தில் (MESOZOIC) வாழ்ந்து பின்னர் அற்றுப்போய்விட்ட ஒரு வித மெல்லுடலிகள்தான் அம்மோனைட்டுகள் அல்லது அம்மோனாய்டுகள் என்றழைக்கப்படுகின்றன. உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஏறத்தாழ 8000 வகை அம்மோனைட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அம்மோனைட்டுகளின் ஓடுகள் அளவிலும், வடிவிலும் வேறுபட்டவை. 1.3 செ.மீ முதல் 2 செ.மீ அளவு விட்டமுடையவை. ஒருதளச் சுருளமைப்பு உடையவை. அம்மோனைட்டுகளின் ஓடுகள் தவிர மென்பகுதிகள் கற்படிவங்களாக மாற்றமடையாததால் அவற்றின் தன்மையை அறிய இயலவில்லை. இந்தியா நேபாளம் உள்பட பல நாடுகளிலும் அம்மோனைட்டுகளின் கற்படிவங்கள் கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் அரியலூர்ப் பகுதியில் கிரெட்டேசியஸ் காலத்து (கிரெட்டேசியஸ் காலம் என்பது சுமார் 7 கோடி ஆண்டுகட்கு முற்பட்டதாகும்) அம்மோனைட் கற்படிவங்கள் சுண்ணாம்பு கற்பாறைகளிடையே நிறையக் கிடைக்கின்றன. இவை வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கின்றன. நேபாள நாட்டில் கண்டகி நதியில் கிடைக்கும் கருங்கல்லாலான அம்மோனைட் கற்படிவங்கள் பார்க்க மிக அழகாக இருக்கும். இவையே நம் நாட்டில் சாளக்கிராமம் என்று புகழ்பெற்றுள்ளன. பாற்கடல் பிறந்தாலும் நத்தைதான் சாளக்கிராமமோ என்ற முதுமொழி ஒரு பழைய தமிழ் நூலில் (சேது புராணம்) மேற்கோளாக எடுத்தாளப்பட்டுள்ளது. இதிலிருந்து நத்தை போன்ற, ஆனால் வேறொரு உயிரின் படிவமே சாளக்கிராமம் என்று நம் முன்னோர்கள் அறிந்திருக்கின்றனர். |