பக்கம் எண் :

666

     கலக்குகிறது. நன்றாகக் கலக்கி தனக்கு முன்னே நின்று கொண்டிருக்கும்
பெண்யானைக்கு ஊட்டுகிறதாம். என்ன அன்பு கலந்த காட்சி கண்டீர்களா?

     பெருகு மதவேழம் மாப்பிடிக்கு முன்னின்று
          இருக ணிழ மூங்கில் வாங்கி - அருகிருந்த
     தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
          வான் கலந்த வண்ணன் வரை 2256
                       என்கிறார் பூதத்தாழ்வார்.

     13. திருமலை வேங்கடவன் கோவில் திருச்சானூர் அலர்மேல் மங்கை
கோவில் இரண்டினையும் தொண்டைமான் கட்டியதாக வரலாறு. இங்குள்ள
சுற்று மண்டபங்கள் யாக சாலை, கோபுரங்கள், தானியக் களஞ்சியம்
கொடியேற்று மண்டபம் போன்றன தொண்டைமான் கட்டியதாகும். இங்கு
காணப்படும் கல்வெட்டுகளில் தொண்டைமானின் கட்டிடப்பணி
குறிக்கப்பட்டுள்ளது. இன்றும் இத்தலத்தின் உட்புறச் சுவர்களில் மூல
ஸ்தானத்தைச் சுற்றிவரும் நடைபாதையிலும், மண்டபங்களைத் தாங்கி நிற்கும்
தூண்களிலும் தமிழ்க் கல்வெட்டுகள் உள்ளன. பண்டைய நாகரி
எழுத்துக்களினாலான கல்வெட்டுகளும், தமிழின் தற்போதைய எழுத்து முறை
உருவாவதற்கு சமீப காலத்திற்கு முன் இருந்த தமிழ் எழுத்துக்களைக்
கொண்ட கல்வெட்டுக்களும் உள்ளன.

     தொண்டைமான் இப்பெருமானிடம் மிக்க ஈடுபாட்டுடன் திகழ்ந்து சிறந்த
பக்தி கொண்டிருந்தான். இவனைப் பகைவர்கள் சூழநின்று பொருதபோது
போரில் தோல்வி ஏற்படக்கூடிய சூழ்நிலையில் வேங்கடவனை வேண்ட
வேங்கடவன் தனது சங்கு சக்கரங்களைத் தொண்டைமானுக்கு அளிக்க
போர்வென்ற தொண்டைமான் அதை பெருமாளுக்கு மீளச் சமர்ப்பித்து
எனக்களித்த இவைகள் எனது கண்களுக்கு மட்டுமே தெரியவேண்டும் என்று
வேண்ட அவ்வண்ணமே பெருமாள் அருள்புரிந்ததாகவும் கூறுவர்.
இதேபோல் தொண்டைமானின் வாழ்க்கையில் பலமுறைகள் அதிசயத்தக்க
நிகழ்வுகளை வேங்கடவன் நிகழ்த்திக் காட்டினார். நூல்கள் பலவற்றிலும்
தொண்டைமான் எனவும், தொண்டை மன்னன் எனவும்
கூறப்பட்டுள்ளதேயன்றி மன்னனின் பெயர் குறிப்பிடப்பட வில்லை.