பக்கம் எண் :

667

     14. இராமானுஜர் தனது இளம் வயதில் இம்மலையைச் சேவிக்க வந்த
போது மலையடிவாரத்திலேயே நின்று கொண்டு மலையின் மேல் வேங்கடவன்
இருப்பதால் தான் மிதித்து நடந்துவர விருப்பமில்லை என்று தெரிவித்ததாகவும்,
இவருக்காகவே இவரது தாய் மாமனாரான திருமலை நம்பிகள் மலைமேலிருந்து
தினமும் இறங்கி வந்து இராமாயணம் கற்பித்ததாகவும் கூறுவர். பிற்காலத்தே
வேங்கடவன் இராமானுஜரைத் திருமலைக்கு வருமாறு தெரிவித்ததின்
அடிப்படையிலே இராமானுஜர் மலைமீது ஏறினார் என்றும் கூறுவர்.

     இராமானுஜர் ஆதிசேடனாகையால் எம்பெருமான் திருவாசல் முன்பு
நடந்து செல்வதற்கே மனம் ஒவ்வாதவராக இருந்தார் என்னும் கூற்று பல
இடங்களில் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இளம்வயதில் இராமானுஜர்
இக்கொள்கையின்றும் மாறுபடாதவராய் இருந்தார். இராமானுஜர்
திருக்கோட்டியூர் நம்பிகளிடம் திருமந்திரம் பயில வந்த காலை
திருக்கோட்டியூரில் நம்பிகளின் திருமாளிகைக்கு வரும்பொழுது
திருக்கோட்டியூர் தலத்தின் மதிலருகே வந்தவுடன் மண்டி யிட்டு ஊர்ந்து
சென்றே நம்பிகளின் வீட்டை அடைவார் என்றும் கூறப்படுவது. இங்கு ஓர்ந்து
நோக்கத் தக்கதாகும்.

     இராமானுஜர் திருமலைக்கு வந்த போது இப்பெருமானின் கைகளில்
சங்கு சக்கரங்கள் இல்லாததால் இத்தெய்வத்தைச் சிவன் என்றும், இந்து
மதத்தின் வேறு பிரிவுகளின் தெய்வமென்றும் பலவாறு கூறி நிற்க இதையறிந்த
ராமானுஜர் தொண்டைமானின் வேண்டுகோளுக்கிணங்க மற்றவர்கட்கு
தெரியாமல் இருந்த சங்கு சக்கரங்களை யாவருங் காண அருள்
வேண்டுமென்று வேங்கடவனை வேண்ட அவ்விதமே ஆயிற்றென்பர்.

     இராமானுஜர் திருவேங்கடத்தில் சங்கு சக்கரங்கள் தோன்றக்
காரணமாயிருந்தார். திருக்கோட்டியூரில் திருமந்திரம் உலகுக்குத் தோன்றக்
காரணமாயிருந்தார். திருவரங்கத்தில் கைங்கர்யம் உலகப் பிரசித்திபெறக்
காரணமாயிருந்தார். மேலக்கோட்டை திருநாராயண புரத்தில் செல்லப்பிள்ளை
தோன்றக் காரணமாயிருந்தார். செல்லும் இடங்களிலெல்லாம் வைணவம்
தழைத்தோங்க காரணமாயிருந்தார்.