பக்கம் எண் :

671

     என்று சொல்லப்பட்ட இந்த வேங்கடவன் சகல பிணிகளையும் தீர்க்கும்
மருத்துவன் என்றும் ஆழ்வார்கள் பாடியுள்ளனர்.

     வேங்கடவனின் பெருமையை ஆழ்வாராலே உணர்த்த முடியாதென்று
தலைக்கட்டும்போதும் பாவியேன் எங்ஙனம் கூற இயலும்.

     இதோ பொய்கையாழ்வார் கூறுகிறார்
 

     உணர்வா ராறுண் பெருமை? ஊமிதோறூழி
          உணர்வாராறுன் னுருவந்தன்னை - உணர்வாரார்
     விண்ணகத்தாய் மண்ணகத்தாய், வேங்கடத்தாய் நால்வேத
          பண்ணகத்தாய் நீ கிடந்த பால் - 2149

     18. திருவேங்கடத்தைப் பற்றி சிலம்பு செப்புகிறது.

     உயர்ந்த மலை உச்சியிலிருந்து அருவி நீர் கொட்டிக் கொண்டிருக்க
சூரியனும் சந்திரனும் எதிரெதிரே எழுந்து நிற்க இடைப்பட்ட இம்மலையில்
மின்னலை ஆடையாக உடுத்திக்கொண்டு ஓடி நீலமேகம் நிற்பது போல்
எழுந்தருளி பகைவெல்லும் ஆழியும், பால் நிறம் போன்று சங்கும் இருபுறமும்
திகழ தாமரையைக் கரத்தில் ஏந்தி கிளர்ந்தெழும் ஆரத்தை மார்பில் பூண்டு
தூய பட்டாடை உடுத்தி செங்கண் நெடியோன் நிற்கிறான் என்கிறார்
இளங்கோவடிகள்.
 

     வீங்கு நீர் அருவி வேங்கட மென்னும்
          ஓங்குயர் மலயத்துச்சி மீமிசை
     விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
          இருமருங் கோங்கிய இடைநிலை தானத்து
     மின்னுக் கோடியுடுத்து விளங்குவிற்பூண்டு
          நன்னிற மேகம் நின்றது போலப்
     பகையணங் காழியும் பால் வெண்சங்கமும்
          தகைபெறு தாமரைக் கையில் ஏந்தி
     நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
          பொலம்பூ ஆடையின் பொலிந்து தோன்றிய
     செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்
                      என்கிறார் இளங்கோவடிகள்.