| வடகடலுக்குச் சென்று வழிபட்டு அதனைத் திருப்பாற் கடலாகக் கொள்ளும் பழக்கமும் உண்டு. ஆயின் இதனை ஏற்றுக்கொள்வதிற்கில்லை. வங்கக் கடலில் நிறம் வெண்மையல்ல. அதன் நிறம் என்னவென்றும் அனைவருக்கும் தெரியும். திருப்பாற் கடலையோ வெண்மை நிறத்தது என்று ஆழ்வார்கள் அறுதியிட்டுள்ளனர். மேலும் எம்பெருமான் திருபாற்கடலில் சென்றே தன்னை வ்யூகப்படுத்தி உலகு படைத்தான். அவ்வாறு படைக்கப்பட்ட உலகில் உள்ள வடகடலை (வங்கக்கடல்) சிருஷ்டியை தோற்றுவித்த திருப்பாற்கடலாய்க் கொள்வ தெங்ஙனம். அவ்வாறாயின் அவ்வடநாடாறிரண்டு என்பதில் திருப்பாற்கடலை நீக்கிவிட்டால் வடநாட்டுத் திவ்ய தேசங்கள் பதினொன்று என்பதே பொருந்தும். எனவே 12 வதாக வடநாட்டில் கூறப்பட்ட தலம் யாது என்னும் கேள்விக் குறியெழுகிறது. இந்நிகழ்ச்சியைக் கூறும் பேயாழ்வார் “மாலவ மந்தரத்தால் மாநீர் கடல் கடைந்து” (2314) என்று கூறும்போது வங்கக் கடல் கடைந்து என்று கூறாமையும் இங்கு சிந்திக்கத்தக்கது. எனவே திருபாற்கடல் என்பது வங்கக்கடல் அல்ல என்பதும் பூர்வாச்சார்யார்களால் ஞானதிருஷ்டியால் நோக்கப்பட்ட விண்ணுலகில் உள்ள திருப்பாற்கடல் என்பதே சாலவும் பொருந்தும். பேயாழ்வாரின் மங்களாசாசனப்படி திருப்பாற்கடல் என்பது விண்ணுலகில் உள்ளதேயன்றி. நில உலகில் உள்ள வங்கக்கடல் அல்ல. 5. வராகம், கூர்மம், மச்சம் என்னும் மூன்று அவதாரங்களை பாற்கடலில் கிடந்த வண்ணத்திலிருந்தே பெருமாள் மேற்கொண்டார் என்கிறார் பெரியாழ்வார். பன்றியு மாமையு மீனமுமாகிய பாற்கடல் வண்ணா - 250
| இம்மூன்றும் வெண்மை நிறத்தன என்பதும் இவ்வவதாரங்கள் கூப்பாடு கேட்கும் பாற்கடலில் இருந்து எடுக்கப்பட்ட அவதாரங்கள் என்பதும் ஆழ்ந்து சிந்திக்கத்தக்கதாகும். |