108. திருப்பரமபதம் (திருநாடு, வைகுண்டம், பரம்)
ஏன்றேன் அடிமை இழந்தேன் பிறப்பிடும்பை ஆன்றேன் அமரர்க் கமராமை - ஆன்றேன் கடன் நாடும் மண்ணாடும் கைவிட்டு, மேலை இட நாடு காண இனி. (2476) நான்முகன் திருவந்தாதி 95
|
பல்பிறப்பும் பிறந்து பெரும் துன்பமுற்று இழிவுபட்டேன். திருமாலே
அமரர்கட்கும் வணங்காது உனக்கடிமையாக இருந்து கடல்நாடு மற்றும்
மண்ணுலகில் உள்ள திவ்ய தேசங்களில் எல்லாம் அமிழ்ந்தேன்.
அங்கெல்லாம் என்னை ஆற்றுப்படுத்திக் கொண்டேன். அமரர்கட்கு
அடிமைப்படவில்லை. நினக்கே அடிமைப்பட்டு ஆன்றேன். இனி நான்
இப்பூவுலகில் காணத்தக்க நின் திருவுருவ அர்ச்சாவதாரங்கள் ஏதுமில்லை.
இனிநான் அடையவேண்டியது மேலை நாடான பரமபதம் ஒன்றுதான். எனவே
எனக்கு முக்தி வீடாகிய வைகுந்தத்தை கொடு. அதுவே இனி நான்
அடையவேண்டிய நாடாகும் என்று திருமழிசையாழ்வாரால் பாடப்பட்ட
இத்திருநாடு என்பது யாண்டுள்ளது என்று எப்படிக் கூறமுடியும்?
விஷ்ணுவின் அடியவர்கட்கு முக்தியில் நாட்டம்கொண்ட முக்தர்கட்கு
திவ்யதேசங்களில் ஊறித்திளைத்துப் போன பக்தர்கட்கு திருநாடு மிகவும்
சமீபம். அவனது சாயுஜ்யம் அவர்கட்கு மிகவும் சாமீப்யம். ஆம் இதிலெல்லாம்
திளைத்தவர்களை அவனே வந்து தன் திருநாடுக்கு இட்டுச் செல்கிறான்
என்பது ஐதீஹம். எனவே இந்த நாட்டிற்கு வழி அவனுக்கு மட்டுமே தெரியும்.
இந்த ஊருக்குச் சென்று அங்கிருந்து 7 கி.மீ. என்று கூறிவிடமுடியாது.
வைணவ அடியார்கட்கு, அவனன்றி தமக்குப் புகலிடம் யாதுமில
என்றெண்ணி அடியவர்கட்கு மோட்சத்தை நல்கும் இந்தப் பரமபதமே
வைணவர்களின் கடைசி இலக்காகும்.
பரமபதத்திலிருந்து தன்னை வ்யூகப்படுத்தி விபவ, அர்ச்சாவதாரங்களில்
தன்னைக் காட்டிக்கொடுத்து இவைகளே பரத்தினும் மேலானவை என்று
எண்ணி ஆட்பட்ட அடியவர்களை, பூவுலகில் அவர்களுக்கு விதிக்கப்பட்ட
காலம் முடிவுற்றபின் அவனே வந்து அழைத்துச் செல்கிறான்.