மோட்சம் பெறுவதே குறிக்கோள் என்றென்னும் அடியார்கட்கு இந்த பரமபதமே எல்லை நிலமாகும். திருநாட்டைப் பற்றிப் புராணங்களாலும் ஆழ்வார் பாசுரங்களாலும் உணரலாம். இராமானுஜர் இயற்றிய வேதாந்த சங்கிரஹம் என்னும் நூல் திருநாட்டைப் பற்றித் தெளிவாகவும், நேரில் பார்ப்பது போலவும் விளக்கிப் பேசுகிறது. இராமானுஜர் இயற்றிய கத்யத்ரயத்தில் ஒன்றான வைகுண்டகத்யத்தில் பரமபத வர்ணனை சிறப்பாக இருக்கும், இராமானுஜரின் வரலாற்றைப் பேசும் “ப்ரபந்நாம்ருத தர்ப்பணம்” என்னும் நூலில் பரமபதம் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது. “திருவனந்தாழ்வானின் மேல் - தடக்கையனாய் சங்கு சக்ர கதாதாரனாய், காயாம்பூ இதழ்போல் கருத்தவனாய் தாமரை இதழ்போன்ற திருக்கண்களை உடையவனாய், கோடி மன்மதர்களை ஒத்த அழகு உடையவனாய். உலகை மயக்கும் திருமேனி உடையவனாய், கோடிச்சூர்யப் பிரகாசமுடையவனாய், கோமளமான அவயவங்களால் நிற்பவனாய், தோள்வளை, ஹாரம் முன்கைவளை, சதங்கை முதலான திருஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவனாய், அப்ராக்ருத சந்தனத்தால் பூசப்பெற்ற திருமேனியை உடையவனாய். பீதாம்பரத்தை தரித்தவனாய், நித்யயௌவன முடையவனாய், எப்போதும் ஸ்ரீபூமி, நீளா தேவிகளோடு கூடினவனாய் (ஈஸ்வரர்களுக்கெல்லாம் மேலான) பரமேஸ்வரனாய் நித்தியர்களாலும் முக்தர்களாலும் சேவிக்கப்படுபவனாய் (அனைவரினும்) பெரியவனாய் ஸர்வவ்வியாபியான பரமபத நாதன் பேரின்பத்துடன் எழுந்தருளியிருக்கிறான்”. (ப்ரப்பந்நாம்ருத தர்ப்பணம் (23-26) இத்திருநாட்டை அடைய இரண்டு பாதைகள் உண்டு. 1. எல்லாவற்றையும் துறந்துவிட்டு அவன் ஒருவனே பற்றுக்கோடு என்று எண்ணி, மாலையில் இம்மியும் சிக்காதிருந்து அவனுக்கே கைங்கர்யம் பூண்டிருத்தல். 2. வைணவ அடியார்கட்கு பேதமற்ற தொண்டு செய்தல். மூலவர் பரமபதநாதன், வைகுண்டபதி, தெற்குநோக்கி வீற்றிருந்த திருக்கோலம். தாயார் பெரியபிராட்டியார் |