பக்கம் எண் :

687

7. அத்யயனோத்ஸவம்

     திருவாய்மொழிக்கு வேதத்திற்குச் சமமான ஏற்றம் கொடுத்து ஆண்டு
தோறும் மார்கழி மாதத்தில் நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழியைப்
பாராயணம் பண்ணவும். அத்திருவாய் மொழிக்கென ஒரு பத்து நாள் விழா
நடக்கவும், இராமானுஜர் ஏற்பாடு செய்து திவ்ய தேசங்களில் வேத ஒலிகளுக்கு
இருந்த முக்கியத்துவத்தை தீந்தமிழ்ப் பாசுரங்களுக்கு உண்டாகச்செய்தார்.
இதற்கு அத்யயனோத்ஸவம் என்று பெயர்.

     ஆண்டுதோறும் திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசிக்குப் பின் 10
நாட்களுக்கு அத்யயனோத்ஸவம் என்ற பெயரால் திருவாய்மொழித் திருவிழா
நடந்துவருகிறது. இது பின்னால் திவ்யதேசங்களிலும் பின்பற்றப்படலாயிற்று.

     இவ்விதம் தமிழ்ப்பாக்களுக்கு ஆலயங்களில் 10 நாள் திருவிழா எடுத்து
தமிழுக்கு விழா எடுக்கும் புதுமையை முதன்முதலில் செய்தவர் இராமானுஜரே.

     மார்கழி மாதம் வளர்பிறை பிரதமை திதி முதல் தசமி திதி முடிய 10
நாள் விழாவிற்கு பகல்பத்து என்று பெயர். இதில் திருப்பல்லாண்டு
முதலாயிரம், கண்ணி நுண் சிறுத்தாம்பு, திருமொழி, திருக்குறுந்தாண்டகம்,
திருநெடுந்தாண்டகம், ஆகிய இரண்டாயிரம் பாசுரம் இசைக்கப்படும்.

     தசமிக்கு மறுநாளான வளர்பிறையின் ஏகாதசி திதி முதல் தேய்பிறையின்
பஞ்சமி திதி முடிய 10 நாள் விழாவிற்கு இராப்பத்து என்று பெயர். இதில்
திருவாய் மொழி ஆயிரம் பாசுரம் இசைக்கப்படும். இதற்கு மறுநாளான
இருபத்தியோராவது நாள் இயற்பா ஆயிரமும் இசைக்கப்படும்.

     இப்பாடல்களை எம்பெருமானே இனிமையுடன் கேட்பதால் தாளத்தோடு
இசைக்க இசை வல்லாரான அரையர்களையும் இராமானுஜர் நியமனம் செய்தார்.
எனவே இதற்கு அரையர் சேவை அல்லது அரையர் இசை எனப்பெயருண்டு.

     உத்திராயணம் தேவர்கட்கு உரிய காலமாகும். தை முதல் ஆனி முடிய
உள்ள 6 மாத காலமே உத்திராயணாகும். நமது ஒரு வருடம் தேவர்கட்கு ஒரு
நாளாகும். இதில் உத்திராயணம் பகற்பொழுதாகவும், தட்சிணாயணம் இரவுப்
பொழுதாகவும் கணக்கிடப்படும்.

     உத்திராயணம் தை மாதம் துவக்கம் என்றால் அதற்கு முதல் மாதமான
மார்கழி மாதம் (பகல் பொழுதுக்கு முன்பாக உள்ள) பிரம்ம முகூர்த்தமான
அதிகாலைப் பொழுதாகும்.