ஸ்ரீவைணவம் ஒரு விளக்கம் எவன் விஷ்ணுவுக்கு அடிமையோ அவன் ஸ்ரீ வைணவன். எவன் தன்னை விஷ்ணுவிடம் முழுமையாகச் சரணாகதி பண்ணிக் கொண்டானோ அவனுக்கு வைணவத்துவம் சித்திக்கிறது. அவனுக்கு மண்ணுலகில் சுக துக்கங்கள் சமம். மண்ணுலகில் எல்லா உயிர்களும் அவன் பார்வையில் சமம். விஷ்ணுவிடம் முழுச் சரணாகதி பண்ணிக்கொள்வதால் பிற தெய்வங்கள் அவனுக்குத் தேவையற்றதாகிவிடுகிறது. அவைகள் அவனுக்குச் சாதாரணமானவைகளாகப் படுகின்றன. பிற தெய்வ வழிபாடு அவனுக்குத் தேவையற்றதாகிவிடுகிறது. விஷ்ணுவே சகல தேவதைகளையும் படைத்தான். விஷ்ணுவிற்குள் சகல தேவதைகளும் அடக்கம். எனவே விஷ்ணுவையே தனக்குத் தெய்வமாக்கிச் சரணம் அடைந்தவனுக்கு பிறதேவதை வழிபாடென்பது பொருளற்றதாகிறது. அதாவது கங்கை நீரைக் கையில் வைத்திருப்பவன் கிணறு வெட்டித் தாகம் தீர்த்துக் கொள்ள நினைக்கமாட்டான். விஷ்ணுவாகிய எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணனை “உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன், என்னையும் உன்னிலிட்டேன்”. என்றவாறு இரண்டறக் கலந்த மனப்பாங்கைப் பெற்றபின் அவனுக்குப் பிற தெய்வ சிந்தனைக்கே இடமில்லாமல் போய்விடுகிறது. தூய வைணவர்கள் பத்துப்பேர் குழுமியிருக்கும் இடம் ஒரு திவ்ய தேசத்திற்குச் சமம். ஒரு வைணவன் என்பவன், 1) 12 திருமண் இட்டுக் கொள்ளல் வேண்டும். 2) அடியார்களின் பெயர்களைத் தனக்குப் பெயராக இட்டுக் கொள்ள வேண்டும். 3) வலதுபுறத்தில் சக்கரத்தையும், இடதுபுறத்தில் சங்கும் (ஆச்சார்யரிடம் முறைப்படி) பொருத்திக் கொள்ள வேண்டும். 4) தினமும் பெருமாளுக்கு திருவாராதனம் செய்ய வேண்டும். 5) திருமந்திரம் என்னும் நாராயண மந்திரத்தை உணர்ந்து உரைக்கும் ஆற்றல் பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்குப் பஞ்ச ஸமஸ்காரம் என்று பெயர். (இதைப் பற்றி திவ்யதேச ஸ்தல வரலாற்றுக் குறிப்புகளில் இந்நூலில் சற்று விரித்துரைக்கப்பட்டுள்ளது) | |
|
|