பக்கம் எண் :

8

     இந்நிலைகளை அடைந்த ஒரு வைணவனை எம்பெருமான் எப்போதும்
விடாது பின்தொடர்ந்து பாதுகாத்து வருகிறான். பக்தர்கட்காக எதையும்
செய்யும் பரந்தாமன் ஒரு வைணவன் வழிமாறிச் சென்றாலும் அவனைத்
திருத்திப் பணி கொள்ளச் செய்துவிடுகிறான். இதைத்தான் “திருத்திப் பணி
கொள்வான் எந்தை” என்று ஆழ்வார்கள் மொழிந்துள்ளனர்.

     எத்தனையோ மதங்களில் பிரவேசித்து உண்மை நிலையை அறிந்து
பகவானை அடைய விரும்பிய பக்தர்கள் அவைகளை உதறிவிட்டு வைணவம்
புகுந்ததை வரலாறு காட்டும். திருமழிசையாழ்வாரே சிவவாக்கியர் என்னும்
பெயரில் சித்தராய் இருந்து சைவம் முதலான சமயங்களில் நுழைந்து
அவைகளில் கடைத்தேற வழியில்லாமையையும், முக்தியடைய உபாயம்
இல்லாததையும் அறிந்து வைணவத்திற்கு வந்து (எம்பெருமானாலே திருத்திப்
பணி கொள்ளப்பட்டு) ஆழ்வாராக ஆனார்.

     விஷ்ணு என்ற சொல்லுக்கு

     1) எங்கும் நிறைந்தவர் 2) நன்மை தருபவர்
     3) மாயையிலிருந்து அகற்றுபவர்
     4) எல்லாப் பொருள்களின் உயிர்நாடியாயிருப்பவர்.

     என நான்கு பொருள் உண்டு. இப்பேர்ப்பட்ட விஷ்ணுவே
அனைத்திற்கும் பிறப்பிடம் என்பது கீதையின் வாக்கு. ஆதிதேவனாக
விளங்கும் இந்த மகாவிஷ்ணுவை நீரில் புஷ்பங்களால் அர்ச்சித்தும்,
அக்னியை ஆகுதி செய்தும், மனதினால், தியானம் செய்தும், சூரியனை
நோக்கி மந்திரங்களை உச்சரித்தும், சிலா ரூபங்களையும் வரைபடங்களையும்
பிம்பங்களையும், வைத்துப் பூஜித்து வழிபடலாமென பாகவத
புராணங்கூறுகிறது.

     வைணவ மார்க்கத்தில் அடிப்படையான கொள்கை அந்த
பரமாத்மாவாகிற விஷ்ணு உலகம் முழுவதும் வியாபித்து நிற்பதனால் உலகம்,
அதனுள் அடங்கிய சகல வஸ்துக்களும் அவனுடைய சரீரமாகிறதென்பதுவும்,
அவனே அந்த சரீரத்திற்கு ஆன்மாவாகவும் இருக்கிறான் என்பதாகும்.
அதாவது பரமாத்மா ஆன்மா என்றால் ஜீவாத்மாக்கள் அவனையே
சார்ந்திருக்கின்ற சரீரமாகின்றன. அவன் எஜமானாகின்றான். அவன் சுவாமி.
ஜீவாத்மாக்கள் அவனுடைய சொத்துக்கள். அவன்தான் நம்மைப் பேணிப்
பாதுகாக்கின்றவன். நாம் அவனையே சார்ந்திருக்கின்ற, அவனால்
காப்பாற்றப்படுகின்ற பத்தினியாக - பெண்ணாக ஆகிறோம். புருஷன் என்ற
சொல் வேண்டியதைக் கொடுக்கிறவன் என்ற பொருளைத் தருகிறது. (லட்சுமி
தேவிதான்