| என்னை ஸ்ரீரங்கத்தில் உள்ள அழகிய மணவாளனே அனுப்பிவைத்தான் என்று சொல்ல, சரி, அப்படியானால் சுவாமி, காலியான மரக்காலுடன் வந்திருக்கிறீர்களே என்று கேட்க, அதற்கந்த வணிகர் இந்த மரக்காலைக் கையில் எடுத்து வேண்டிய பொருளை மனதில் தியானித்து எம்பெருமானே சரண் என்று 3 தடவை சொன்னால் அப்பொருள் சித்திக்கும் என்று சொன்னார். அப்படியானால் இங்குள்ளவர்களுக்கு கூலி கொடுக்க வேண்டும். இந்த மணலை அளந்து போடும் என்று கூறினார். அதற்குச் சரியென்று ஒப்புக் கொண்ட வணிகர் ஒரு நிபந்தனை விதித்தார். அவர்களின் கூலிக்காக இந்த மணலை நான் அளந்து போடுகிறேன். உண்மையாக உழைத்தோருக்கு பொன்னாகவும் சோம்பலுடன் ஏமாற்றியவர்களுக்கு மணலாகவே காட்சி தரும் என்று கூறி அளந்து போட பெரும் பாலானோர்க்கு மணலாகவே தெரிய, இவன் மந்திரவாதி என்று பலர் அடிக்கவர, வணிகர் மெல்ல நகர, திருமங்கை பின்தொடர, இவருக்கு காட்சியளிக்க நினைத்த எம்பெருமான் மிகவிரைவாகச் செல்ல திருமங்கை தமது குதிரையிலேறி பின் தொடர்ந்தார். இவ்விதம் ஓடிவந்து திருமங்கைக்கு காட்சி கொடுத்து மரக்கால், ஓலை, எழுத்தாணியோடு ஆதனூரில் புகுந்து கொண்டதாக ஐதீகம். அவ்வாறு ஓடிவரும்போது இவ்வூருக்கு (ஆதனூருக்கு) அருகில் உள்ள ஓர் ஊரில் ஓலை எடுத்து கணக்கு எழுதியதால் அவ்வூருக்கு ஓலைப்பாடி என்றும் கம்பீரமாக நடந்துவந்த ஊர்க்கு விசயமங்கை எனவும், ஓடிவரும் போது திரும்பிப்பார்த்த ஊர் திரும்பூர் எனவும், திருமங்கையாழ்வார் விரட்டிக்கொண்டு வருகின்றானா இல்லையா என்று மயங்கி நின்ற ஊர் (மாஞ்சுபோனது) மாஞ்சேரி எனவும், மரக்காலுக்குள் கை வைத்த ஊர் வைகாவூர், என்றும் புகுந்தது பூங்குடி என்றும், அமர்ந்தது ஆதனூர் என்றும் கூறுவர். ஊர்கள் எல்லாம் இன்றும் அதே பெயரில் வழங்கி வருகின்றது. எனவே இந்நிகழ்ச்சியும் (அரங்கனே இங்குவந்ததால்) திருவரங்கத்திற்கும் ஆதனூருக்கும் உள்ள ஒற்றுமையை புலப் படுத்துகிறது. |