12. திருக்குடந்தை (கும்பகோணம்)
பாலாலி லையில் துயில் கொண்ட பரமன் வலைப் பட்டிருந்தேனை வேலால் துன்னம் பெய்தாற் போல் வேண்டிற் றெல்லாம் பேசாதே கோலால் நிறை மேய்த் தாயனாய்க் குடந்தை கிடந்த குடமாடி நீலார் தண்ணந்துழாய் கொண்டு என் நெறி மென்குழல் சூட்டீரே நாச்சியார் திருமொழி 13-2 (628) |
என்று ஸ்ரீ ஆண்டாளால் காதற் பாமாலைச் சூட்டப்பட்ட மாயன்
கிடக்கும் குடந்தை என்னும் கும்பகோணம் கோவில்களின் நகரமென்றும்,
தஞ்சைத் தரணியில் தனிப்பெருமை வாய்ந்த பதியென்றும் எவருக்குஞ்
சொல்லாமல் எளிதில் விளங்கும்.
இத்திருக்குடந்தையில் பள்ளி கொண்டுள்ள ஆராவமுதப் பெருமாளைப்
பற்றி பிரம்மாண்ட புராணம், பாத்ம புராணம், பவிஷ்ய புராணம் போன்ற
நூல்கள் பரக்கப் பேசுகின்றன. பவிஷ்ய புராணம் 32 அத்தியாயங்களில்
பேசுகிறது. சோனாட்டில் காவேரி, அரிசொல் ஆறு (அரசலாறு) எனுமிரு
நதிகளுக்கிடையேயான அழகான ஷேத்ரமாகும்.
இப்பெருமானின் தோற்றத்தை ஆராயப் புகுங்கால் திருப்பதி
சீனிவாசனும், அரவணை கிடந்த ஸ்ரீரங்கநாதனும் தாமே வந்து இங்கு புகுருவர்.
மும்மூர்த்திகளில் சாந்தம் நிறைந்தவர் யார் என்று அறியச் சென்ற
ப்ருகு முனிவர், திருமாலின் நெஞ்சில் உதைக்க இதனால் அவமானம்
அடைந்த லெட்சுமி தன் மணாளனை விட்டுப் பிரிந்து இப்பூவுலகிற்கு வந்து
மறைந்திருக்கலானார். ப்ருகு முனிவரும் எம்பெருமானை உதைத்த பாவத்தைப்
போக்கவும், மனம் நொந்த திருமகளை சாந்தி அடையச் செய்யவும், திருமகளே
தனக்கு மகளாக வந்து பிறக்க வேண்டுமென்றும், தான் பணிவிடை செய்து
தனது பாவத்தைப் போக்கிக்கொள்ள வேண்டுமென்றும் நினைத்து ஹேம
மஹரிஷி என்ற பெயரில் இத்தலத்தில் கடுந்தவம் செய்து வரலாயினர். திரு
இழந்த லோகத்தில் தாமும் இருக்க வொன்னா எம்பெருமான் லட்சுமி
தேவியைத் தேடி பூவுலகிற்கு வந்து திருமலையில் (திருப்பதியில்) ஒரு புற்றில்
மறைந்து வசிக்க, பத்மாவதி என்னும் கன்னியைத் திருமணம் செய்து
கொண்டார்.