12முன்னுரை

-களின் முதிர்ந்த பருவத்தில் தொடங்கப்பெற்ற இவ்வரும் பெரும்பணி முற்றுப் - பெறுமோ பெறாதோ எனப் பெருங்கவலையுடனிருந்தேன். திரு. முதலியாரவர்களின் புனித அறிவிற் கலந்து இப்பெரும்பணியை முடித்தருளிய திருவருட் சத்தியை மிகவும் போற்றுகின்றேன். அச்சிடவேண்டிய ஏனைய பகுதிகளும் அச்சியற்றப்பெற்று உலகம் பேருரையின் முழுப்பயனையும் அடையும்வண்ணம் செய்தருளவேண்டுகின்றேன். தில்லையில் நடைபெற இருக்கும் விழாவிற் கலந்து கொள்ள எனது உள்ளம் விழைகின்றது. உடற்றளர்வு இடம் தரவில்லை. மன்றவாணன் மலர்த் தாள்களை எனது உயிரினுமினிய திரு. முதலியாரவர்கட்கு நீண்ட வாழ்நாள் அளித்து இன்னும் சைவ உலகமும் தமிழுலகமும் பயன்பெறும்வண்ணம் செய்தருளுவதாகுக. திரு. முதலியாரவர்கட்க்கும், அவர்கட்குப் பெரிதும் துணைபுரிந்துவரும் தங்கட்கும் அடியேனது முழு வணக்கமும் உரியதாகுக.
திருமுறையுள் ஒருமுறையாய்த் திகழுமுயர் தொண்டர்கதை
தருபொருளின் வளமனைத்தும் தழுவுமொரு பேருரைதான்
கருமருவுங் கண்டனடிக் கமலத்தின் பூசனையால்
வருமுணர்வின் திறத்தளித்தான் வயங்குசிவக் கவிமணியே.
 
பரிமே லழகன் பகருரையும் பழனஞ் சூழும் பதித்துறைசை
மருவுந் தவத்துச் சிவஞான முனிவன் வழங்கும் பேருரையும்
இருமா ஞாலத் திலங்குதல்போல் இணையி லடியா ( ர்) பாதமலர்
பரவுஞ் சுப்ர மணியனுரை பாரி லென்றும் மன்னுகவே.
 
 
29-6-48
அன்பன்
ந. சிவகுருநாதன்           
சித்தாந்த ஆசிரியர்
8.
அன்புடைய நண்ப,
     தங்கள் கடிதம் கிடைத்தது. சிவக்கவிமணி - சி. கே. சுப்பிரமணிய முதலியார், பி. ஏ. அவர்கள் இயற்றிவரும் திருத்தொண்டர்புராணப் பேருரையின் எழுத்துப்பணி முற்றுப்பெற்றதை ஓர் விழாவாகக் கொண்டாடுவது அறிய மிக மகிழ்வுறுகின்றேன். "உலகெலா முணர்ந்தோதற் கரியவன்" என்று தெய்வமணக்குஞ் செய்யுளியற்றுஞ் சேக்கிழார் பெருமானுக்கு அடியெடுத்தருளிய இறைவன் சபாநரதன் எழுந்தருளி வீற்றிருக்குந் தில்லையின்கண்ணே அவ்விழா நடைபெறுதல் மிகப் பொருத்தம். சேக்கிழார் பெருமானின் ஒப்பற்ற கவிப்புலமையைத் திறம்பட உரையாசிரியர் எடுத்து விளக்கியிருக்கின்றார்கள். இவ்வுரை திருத்தொண்டர் புராணத்தின் பலதிறப்பட்ட நயங்களை அறிந்துகொள்ள ஓர் நல்ல கருவியாகும். இவ்வுரையில்லையாயின் அந்நலங்களெல்லாம் மறைபட்டு விலங்காதிருக்கும்.
     தவிரத், தெய்வச்சேக்கிழார் உளம்புகுந்து அவர் கருத்துக்களை அன்னார் எண்ணியவாறே எடுத்துக்காட்டுதலினால் இப்பேருரை இணையிலாச் சிறப்பு எய்துகின்றது. ஓர் ஆசிரியர் தமிழ் நூல்கள் அனைத்தையும் கற்கலாம்; பிற மொழிகளிலுள்ள பெரு நூல்களையும் பயிலலாம்; உரைகள் எழுதித் தன் கல்வித் திறமையைக் காட்டலாம்; ஆயின் நூலாசிரியரின் உள்ளத்தில் நுழைந்து அவர் கருத்தை அறிவதும் அளப்பதும் அரிது அரிது. இப்பணியில் பேராசிரியர் பெரிய வெற்றிபெற்றுவிட்டார்கள். உலகத்தில் பலதிறப்பட்ட தொழில்கள் உள்ளவர்களுக்கும் இவ்