திருத்தொண்டர் புராணமும் - உரையும்13

-வுரை இன்பமளிக்கும். சட்டம், சிற்பம், இசை, மருத்துவம், தத்துவம், விஞ்ஞானம் இன்னும் அநேக கலைகளின் நுட்பங்கள் செறிந்த தொண்டர் -புராணத்தை அந்நுட்பங்கள் வெள்ளிடையாகக் கூறியிருக்கும் தனிப்பெருமை உரையாசிரியர் அவர்களுக்கே உரியது. சேக்கிழார் பெருமானின் தெய்வத்தன்மையும், உரையாசிரியரின் பரந்த விரிந்த ஆழ்ந்த கலையுணர்ச்சியும் தெற்றென விளங்குகின்றன. சேக்கிழார் பெருமானின் தொண்டர் புராணத்தின் பேருரை அவரடிச் சுவட்டைப் பின்பற்றும பேரறிஞரும் பக்தருமாகியவராற்றான் இயற்றமுடியும்.
     தூய வெண்ணீறு துதைந்த பொன்மேனியும் தாழ்வடமும், நாயகன் சேவடி தைவரு சிந்தையும் நைந்துருகிப், பாய்வது போலன்பு நீர்பொழி கண்ணும் செஞ்சொல் மேய செவ்வாயுந் திருக்கரமுமுடைய நமது உரையாசிரியர் அவர்களுக்கு இறைவனருள் மிக உண்டென்றும் அவ்வருளின் உறுணைகொண்டுதான் இப்பேருரை இயற்றமுடிந்தது என்றும் திண்ணமாய் நம்புகின்றேன். இப்பேருரை தமிழ்மொழி உள்ளளவும் நிலவிவரும். தமிழ்மொழியில் Cyclopedia என்ற பேரும் பெறும். ஆசிரியர் வாழ்க. தற்காலத் தமிழ் நண்பர்கள் அவர்களைப் பின்பற்றித் தமிழ் மொழிக்கு நற்பணி ஆற்றுக. ஆசிரியர் அவர்கள் அவ்வன்பர்களை வாழ்த்துக.
தென்காசி
28-6-48
 
ஏ.சி. ஷண்முக நயினார், B.A., B.L.
 
9.
சிவப்பண்பும் தவப்பண்பும் நிறைந்த செல்வரவர்களுக்கு
     தாங்கள் பெரியபுராணத்திற்கு எழுதிவந்த பெரிய உரையின் நிறைவு விழாக்கொண்டாட்ட நிகழ்ச்சி முறையைக் கண்டு களிக்கின்றேன். உடல் நலமின்மையால் நேரிற் கலந்து மகிழும் பாக்கிய மிலாதவனாயுள்ளேன். இப்போது நடைபெறும் கொண்டாட்ட தினங்கள் பலநூற்றாண்டுகளுக்குமுன்பு தெய்வச்சேக்கிழார் தாம் அருளிய புராணத்தைத் தில்லையில் அரங்கேற்றின விழாப் பொலிவைப் பெரிதும் நினைவூட்டுகின்றன. இந்த அரியபெரிய உரையைத் தங்கள் மூலமாகத் தமிழுலகம் பெற்ற காரணத்தால் தாங்கள் ஓர் "அவதார புருஷர்" என்பது நன்கு விளங்குகின்றது. இந்தப் பெரும்பாக்கியத்தைத் தங்களுக்கே சிவபிரான் தந்தருளினார். அந்த அண்ணல் "விதியான வேதவிகிர்தன்" ஆதலின், தங்களுக்கு நீண்ட ஆயுளைத் தந்து இப்பெரிய புராண விரிவுரையை முடித்துவைத்ததுபோலத் தேவார விரிவுரையையும் தங்களைக்கொண்டே முடித்துவைக்குமாறு அவ்வண்ணலின் பொன்னார் திருவடிக்கு விண்ணப்பஞ் செய்கின்றேன்.
பொன்பரவு சீரடிக் கொன்றுண்டு விண்ணப்பம் பொற்சடையாய்!
துன்பா ருலகுய்யத் தேவார நூற்பொருள் சொல்விளக்கம்
நன்பா லளிக்கவே சுப்பிர மண்ய நலத்தகைக்கிங்
கின்பாரு நல்லாயுள் ஆதிய நன்மைகள் ஈந்தருளே!
292, லிங்கசெட்டித் தெரு,
சென்னை, 10-7-48
அன்புடன்
வ. சு. செங்கல்வராய பிள்ளை