திருத்தொண்டர் புராணமும் - உரையும்15

தங்களுடைய திருவுள்ளத்தில் திருவருள் குடிகொண்டிருப்பதால் தங்கள் ஆயுளைத் திருவருள் நீட்டித்து விரிவுரையை (பாக்கியை) அச்சேற்றவும் இன்னும் பல வகையில் மக்களறிவை விளக்கவும் அருள்செய்யப் பிரார்த்திக்கிறேன். தொண்டை நாட்டார் அரிய பெரிய புராணத்தை இயற்றித் தந்தார்; அதற்குச் சேரநாட்டார் விரிந்த உரை யாவர்க்கும் நன்கு விளங்கும்படி செய்துதந்தார் என்பது போற்றத்தக்கது. ஸ்ரீ ஆலவாய்ப்பெருமான் சேர மன்னனுக்குத்தானே திருமுகங் கொடுத்தனுப்பினார்.
     பாண்டிப்பெருமான் சேரனுக்கு அனுப்பியது போற்றத்தக்கதல்லவா? ஆகவே புதைபொருளாகச் சேரநாட்டில் பெரியபுராணப் பொருள் பொதிந்துகிடந்து இப்பொழுது சேரநாட்டுச் சிவக்கவியரசால் விளங்கி விரிந்து நிலைத்ததை யாவரும் கண்குளிரக்??? காண்கிறோம்.
செட்டித் தெரு,
மாயவரம், 4-7-48
               அடியேன்,
ந. முத்தையா முதலியார்
 
13.
தமிழ்ப் பெரியார் திரு. சி. கே. எஸ். அவர்களுக்கு, அடியேன் வணக்கம்.
     தாங்கள் கொண்டிருந்த எண்ணம் - பெரியபுராண விரிவுரை - இனிது நிறைவாகிறதுபற்றி, என்னுடைய மனமுவந்த சந்தோஷத்தையும் தங்கள்மேல் வைத்திருக்கும் பெருமையையும் தெரிவித்துக்கொள்வதுடன், தமிழர் என்றும் தங்களுக்குக் கடமைப்பட்டவராய் விட்டார்கள்.
     தமிழ்நாடும், தமிழும் இப்பேர்ப்பட்ட ஆன்றோர்களால் நவீனகாலமாகிய இன்று மிகுந்த கண்யமடைந்துவிட்டதென்று சொல்வேன்.
     சேக்கிழார் நூலுக்கு, சேக்கிழார் மரபினர் விரிவுரை எழுதியது மிகவும் பொருத்தம்.
     தங்களுக்கு இதுபோல் ஆராய்ச்சியுரை எழுதச், சிதம்பரநாதர் ஆற்றலும், ஆயுளும் தருவார் என்பதே சிறியோனாகிய என் தீர்மானமான கருத்து. அவ்விதமே அப்பனைப் பிரார்த்திக்கிறேன்.
     திருவருட்டுணையால், அம்மகத்தான காரியம் இனிமையாய் முடியும்.
கோயமுத்தூர்,
11-7-48
இப்படிக்கு தங்கள் அடியேன்
A. பழனிசாமி               
கவர்ன்மெண்டு வக்கீல்
14.
1    கூத்தப் பெருமான் ஆயிரக்கால் கூடு மிடத்துச் சேக்கிழார்
யாத்த விரிநூற் பொருள்விரிவும் இந்நாள் அரங்கம் ஏறுதலால்
மூத்த முதல்வன் பேரருளே முன்னின் றாட்டு முறையுணர்க்
காத்த முதல்சுப் பிரமணியர் கடவு ளின்பால் வாழியரோ.
 
2    தொண்டத்தொகையும் வகைவிரியும்தொல்லோன் அமைத்ததுணையேபோல்
கண்ட விரியின் சொற்பொருளும் காட்டும் கண்ணார் ஓவியமும்
மண்டு பொறியின் அமைவனப்பும் எளிமை விரியும் மாண்புறவே
கண்ட சிவனார் கவிமணியும் நூலும் வாழ்க கண்ணளித்தே.