|
முதலியாரவர்கள், பி. ஏ. திருவருட்டுணை கொண்டு இயற்றியருளிய திருத்தொண்டர் புராணப் பேருரையின் எழுத்துப்பணி முற்றுப்பெற்றமை அறிந்து சபையார் பெருமகிழ்ச்சி யடைகின்றார்கள். செந்தமிழ் மொழிப் பயிற்சியும், அதற்குத் துணை புரியும் ஆங்கில நூலுணர்வும் படைத்ததுடன் திருவருட்டுணையையும் நிரம்பப் பெற்றமையினாலேயே இவ்வரும்பெரும் பணியை முடிப்பதற்கு நமது திரு. முதலியாரவர்கட்கு முடிந்தது. "செயற்கரிய செய்வார் பெரியார்" என்னும் திருமறைக்கு நமது பெரியாரவர்கள் சிறந்த இலக்கியமாகத் திகழ்கின்றார்கள். அச்சியற்றவேண்டிய பகுதிகளும் விரைவில் அச்சிடப்பெற்று இப்பேருரை உலகில் என்றும் நிலவி ஆருயிர்க்குத் துணைபுரியும் வண்ணம் திருத்தொண்டர் புராணத்தின் முதலாசிரியனாகிய மன்றவாணன் மலரடிகளை வாழ்த்தி இறைஞ்சுகின்றோம். |
| சபையார் ஆணையின்படி | தெ. ச. சு. சோமசுந்தரம், அமைச்சர், | தூத்துக்குடி சைவ சித்தாந்த சபை, தூத்துக்குடி. | | |
அன்புடையீர்! |
சைவப் பெரியாருக்கு எனது தாழ்மையான வணக்கம். நலம். விரும்புவது மதுவே. |
சிதம்பரம் ஸ்ரீ நடராஜப்பெருமானது ஆயிரக்கால் மண்டபத்தின் நடைபெறும் திருத்தொண்டர் புராண விரிவுரைப் பூர்த்தி விழாவினைக் கண்ணாரக் கண்டு களிக்கும் வாய்ப்பு இன்மைக்கு வருத்தம். எனினும் உடல் இங்கும், உயிரங்குமாக இன்றிருக்கும் என்பது எனது துணிபு. |
திருத்தொண்டர் புராணத்தை யியற்றிய சேக்கிழார் பெருமானே தாங்கள் என்றால் அது ஒருக்காலு மிகையாகாது. ஏன் எனின், மெய் விளங்கிய அன்பர் வரலாற்றைச் சொல்லும் ஆற்றல் குன்றை முனிக்கல்லது வேறெவருக்குமின்று என்பது உமாபதிசிவத்தின் உண்மை வாக்கு. அவ்வருணூலைப் பன்முறை யோதியுணர்ந்து அதில் கண்ட அருமை பெருமைகளையும், சொன்னயம் பொருணயங்களையும், நுட்ப திட்பங்களையும் கற்றோரும் மற்றோரும் எளிதில் தெளிந்து உணரும்படி உரையியற்றும் ஆற்றல் கொங்கு நாட்டுச் சிவக்கவிமணிக்கன்றி ஏனையோர்க்கின்று என்று அடியேன் சொல்வேன். |
தாங்கள் எழுதி யிதுகாறும் வெளியிட்டுள்ள உரைப்பகுதிகள் போக எஞ்சியுள்ள பகுதிகளையும் அச்சுவாகனத்திலேற்றி முற்றுவித்து எங்களையும் உய்விப்பீர்களாக! எல்லாம்வல்ல இறைவன் கலியுகவரதன் கந்தப்பெருமானாகிய எமது சொந்தப்பெருமான் திருவருள் துணை நிற்பதாக! |
இனித் தாங்கள் எல்லா நலங்களுடனும் வஜ்ர சரீரத்துடனும் இன்னும் பல்லாண்டுகள் இருந்து பல நற்றொண்டுகளை யாற்றிவர பால்லாண்டென்னும் பதங்கடந்தவனுக்குப் பல்லாண்டு கூறியடங்குவன். |
வாழ்க சிவக்கவிமணி! |
|