20முன்னுரை

அய்யா அவர்களாலேயே திருத்தொண்டர் புராண விரிவுரையான சஞ்சிகை காணப்பெற்று நம் தமிழ்நாடு பெரும்புண்ணியம் செய்ததென்று மிகமிக மகிழ்ச்சியில் ஆழ்ந்தேன்.
     இவ்விரிவுரை முற்றும் அச்சுஆவதற்கு ஸ்ரீ கோவைகிழாருக்கு நீண்ட ஆயுளும், உடல் வல்லமையும், பொருளும் உண்டாகும்வண்ணம் நமது ஷண்முகநாதனை வேண்டுகின்றேன்.
 
சிவகிரி - அப்பூதி நிலையம்
இங்ஙனம்
ஸ்ரீ அப்பூதித் தொண்டனாம்       
கண்ணய்யர்
23
வாழ்த்துரை
சிவநெறிச் செம்மலே!
     திருநெறிய தமிழாகிய சைவத் தெய்வப் பன்னிரு திருமுறைகளே தமிழர்க்குப் பிரமாணமாக மிளிர்வன. இறுதித் திருமுறையே தெய்வச் சேக்கிழார்பெருமான் அருளிய அருணூலாக விளங்கும் திருத்தொண்டர் புராணமாகும். இந்நூலுக்குப் பலர் பலவுரை கண்டார்கள். நல்லதோர் அகலவுரை எந்நாள் வெளிவரும்? அதனைக் காண்பார் யார்? அது நம் நாளில் வருமா? என்று எதிர்பார்த்திருந்தோம். இறைவன் திருவருள் கூட்டியது. எங்கள் எண்ணமும் ஈடேறியது. கொங்கு நாட்டுச் சிவக்கவிமணியைக்கொண்டு எங்கள் தொண்டைநன்னாட்டுச் சேக்கிழார் அருள் வாக்குக்கு ஓர் அரியவுரையைத் தந்துதவினார். எங்கள் சொந்தப் பெருமானாம் கந்தப்பெருமான் திருவருளால் அதனைக் காணும் பேறு பெற்றோம். அடியார் பெருமையை அளவிட்டுக்கூறுவது சேக்கிழார்க்கன்றி மற்றையோர்க்கு - அரிது என்றார் ஆன்றோர் பலர். அவர்தம் பெருமையை யளவிட்டுக்கூறுவது அவர்கள் திருமரபினராகிய நமது சிவக்கவிமணிக்கன்றி மற்றையோர்க்கரிது என்பேம் நாங்கள். இது ஒரு முகமனன்று. உண்மை! உண்மை! முக்காலுமுண்மை! ஏன்?
     சைவத்திருமுறைகளைப் படனஞ்செய்யத் தொடங்குங்காலும், முடிக்கும் போதும் "திருச்சிற்றம்பலத்தை" யோதுவது சம்பிரதாயமாகும். இத்திருமுறைகளையே ஆண்டிற்கொருமுறையாகப் படனம்செய்துவரும் நியமமுடைய தாங்களும் 1894 முதல் "திருச்சிற்றம்பலத்திடம்" பன்னிரண்டாண்டு பாடங் கேட்டீர்கள் என்பதைத் தங்கள் முகவுரைக்கு முன்னுரை தெரிவிக்கின்றது. பிறகு மற்றொரு பன்னிரண்டாண்டு 1918 வரை கேட்டதைச் சிந்தித்தீர்கள்போலும். அப்போது எங்கள் சைவசமய பக்தஜன சபையின் தாபகரும் பன்னிருதிருமுறையாராய்ச்சியில் தலைசிறந்தவருமான திரு க. சதாசிவ செட்டியார், பி. ஏ. அவர்களது நட்பு ஏற்பட்டது. பின்னுமோர் பன்னிரண்டாண்டு 1930 வரை மேற்படி செட்டியார் அவர்கள் ஆற்றிய பெரியபுராண விரிவுரைக்காலத்துத் தாங்கள் கையேடு வாசிக்கும் வாய்ப்பைப் பெற்றுச் சிந்தித்ததைத் தெளிந்தீர்கள்போலும்.
     இனி இம்முதிர்ந்த அனுபவத்தின்பயனே ஓர் விரிவுரையாக 5 - 6 -1935ல் வெளிவந்தது. இடையில் ஏற்பட்ட யுத்தநெருக்கடியால் இது பூர்த்தியாகும் பேறு பெற்றேமில்லை. எனினும், கையெழுத்துரைப்பகுதி முற்றியதுபற்றி மட்டில்லா மகிழ்ச்சி. இதுவும் விரைவில் அச்சாகி வெளிவரவேண்டுமென்று நட்டப்பெருமானை நாளுந் தொழுவோமாக! தாங்களும் எல்லா நலன்களும் பெற்றுச் சிறப்பாக ஊக்கத்