திருத்தொண்டர் புராணமும் - உரையும்23

வுதித்த வாய்மைக், கல்விமிகு சேக்கிழாஅர் கவிதை யாரக் காவியமாச் செய்தீந்தார் கவிஞரேறே.
1
     மற்றதற்குக் கற்றுவல்ல மதியோர் செய்த மாசிலுரை களையெல்லா மகிழ்வாற் கண்டு, கற்றவர்காண் நுண்பொருள்கள் கருத்தா னோக்கிக் காலத்துக் கேற்றபுது முறைகைக் கொண்டு, சொற்சுவையும் பொருட்சுவையுந் துலங்க நுட்பந் தொடர்பு முதலிய திறனுந் தோன்றக் காட்டி, இற்றைநாள் வரையெவரு மியற்றாவாறே ஏற்றமிகு விரிவுரைசெய் தீந்தான் மாதோ.
2
     நிறைநதியுங் குறைமதியு மணிந்தா னந்த நிருத்தமிகு மெம்பெருமான் நிமலபாதம், இறைகொளவேத் துங்கொள்கை யிதயம் பூண்டோன் எழினீறுங் கண்டிகையு மெழுத்தோ ரைந்தும், முறைமைபெற அணிந்துசெபம் முன்னி வாழ்வோன் முத்தமிழின் றுறைமுழுது மறிந்த முன்னோன், நிறையுளமோ டன்பு பொறை நியமமாதி நேர்மைமிகு நற்குணங்கள் நிரம்பி யுள்ளோன்.
3
ஆழிகு ழுலகினிலே யழியா மேன்மை யருநெறியை வளர்க்கின்ற அன்பால்மிக்கோன்
சூழுமதி யூகிசிவக் கவியென் றோதுஞ் சுப்ரமண்ய முதலியா ராகுந் தோன்றல்
நாளுமிவன் புகழ்நிறுவி நன்மை யோங்கி நாதனருட் சிவஞான நலன்கள் கூடி
ஊழிபல வாழியுல கத்தில் அன்பர் ஓதுதிருத் தொண்டுசிறந் தோங்கி வாழி.
4
ஈழநாட்டுச் சைவ மக்கள்
     ஆக்கியோன் :- யாழ்ப்பாணம் - நாவலியூர் - திரு. சு. சோமசுந்தரப் புலவர் அவர்கள்
27
வாழ்த்துரை
     சர்வபுவன கர்த்தாவாகிய சாம்பமூர்த்தியினது அருட்டிறனையும், அவ்வருட்டிறனைப்பெற்று இன்புற்ற மெய்யடியார் வரலாறுகளையும் தெரிவிக்கும் பெருங்காப்பியமாயுள்ளது திருத்தொண்டர் புராணமென்னும பெரிய புராணம்.
     இத்திவ்விய புராணத்தைப் பாடியருளித் தொண்டர்சீர் பரவினவர் அநபாய சோழ மகாராஜாவினது அமைச்சரும், அருட் புலவரும், அம்பலத்தெம்பெருமான் விடுத்தருளிய திருமுகங்கொண்டு பெற்றான் சாம்பானுக்கு முத்திகொடுத்தமை முதலாம் அற்புதச் செயல்களைச் செய்தருளிய வித்தகராகிய ஸ்ரீமத் உமாபதி சிவாசாரிய சுவாமிகள் புராணஞ்செய்து பாராட்டிய பெருமையுடையவருமாகிய ஸ்ரீ சேக்கிழார் சுவாமிகளாவர். ஆதலின், இப்புராணமானது, நூற்பொருளினாலும், பாடியருளிய அருளாளரின் சிறப்பினாலும் தனக்கு ஒப்பதும் மிக்கதும் இலதாய்ச் சைவ நூல்களில் தலைசிறந்து விளங்குகின்றது.
     இவ்வருட் காவியத்திற்குப் பல நயங்களும் ஒருங்கே அமைந்த பேருரையொன்று வெளிவரவேண்டுமென்னும் விருப்பு வைதிக சைவான் மக்கள் உளத்திற்குடிகொண்டிருந்தது. வேண்டுவார் வேண்டுவதே ஈந்தருளும் பெருங்கருணைக் கடலாகிய சிவபெருமான் திருவருள் வசத்தால், அருத்தநயமும், அன்புநயமும் தொண்டுநயமும், ஞானநயமும் கலந்திலங்க அகலவுரையொன்று கோவைத் தமிழ்ச் சங்கப் பிரசுரமாக வெளிவந்துமுற்றுப்பெற்றிருக்கின்றது. இவ்வுரையானது, இந்நூற்கு முன்னே வெளிவந்துள்ள உரைகளின் சிறப்புக்களையும் அவற்றிற் காணப்பெறாத சிறப்புக்களையும் தன்பாற்கொண்டு சைவ மரபுக்குச்