|
கருத்து. அவர்கள் திருத்தொண்டர் புராணத்தைக் கற்றுக், கேட்டுத், தெளிந்து, உணர்ந்து, சுவைத்து, அனுபவித்துப், பிறரையும் அனுபவிக்கச்செய்து, ஒன்றி அதுவே தானாய நிலையை எய்தியவர்களாகையால், அவர்களது உரையில் ஏனைய உரைகளில் காணப்படாத தெளிவும் நயமும் பொருந்தி இருப்பதைப் பரக்கக் காணலாம். |
மேற்படி பெரியபுராண விரிவுரை நிறைவடைந்து ஆனி உத்தரத்தன்று சிதம்பரம் அம்பலவாணர் சந்நிதியில் வழிபாட்டுடன் ஒப்புவிக்கப்பட்டுப் பின் மூன்று தினங்களுக்கு நிறைவு விழாக் கொண்டாடப்படுமென நமது சித்தாந்த பத்திரிகையில் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைக் கண்ணுற்ற சைவ அன்பர்கள் தமிழ்நாடு செய்த தவப்பயனால் தலைசிறந்த தமிழ்நூல்களுடன் ஒன்றாக வைத்துப் பாராட்டவேண்டிய ஓர் அரிய நூல் நமக்குக் கிடைத்தது என அளவிலா மகிழ்ச்சி அடைந்தனர். |
உடனே நமது எண்ணமெல்லாம் சந்றேறக்குறைய 800 ஆண்டுகளுக்குமுன் நடைபெற்ற பெரியபுராண நிறைவு விழாவிலே ஈடுபட்டிருக்கும்; காலத்திரையைக் கிழித்துக் கொண்டு மேற்படி விழா நமது மனக்கண்ணில் அழகாகக் காட்சியளித்திருக்கும். நாமும் அத்தகைய பெருவிழாவை அதே இடத்தில் காணப்போகின்றோம் என்று அநபாயச் சோழன்போன்ற முடிமன்னன் இல்லையே என்ற கவலை எழுகிறது. எனினும் மக்களாட்சி ஏற்பட்டுள்ள இந்நாளில் நாம் யாவரும் மன்னர்கள்தானே? நாம் ஒன்றுபட்டால் விழாவை இன்னும் சிறப்பாக நடத்தலாம் என்ற நம்பிக்கையும் உதயமாகிறது. |
நாம் ஆவலுடன் காண விழையும் பெருவிழா நமது சிந்தையிலே திரைப்படமெனக் காட்சியளிக்கிறது. ஆயிரக்கால் மண்டபம், மலர்களாலும் தோரணங்களாலும் அழகாக அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. மின்விளக்குகள் தீவண்ணன் திருமேனி காட்டுவான்போல் வரிசை வரிசையாக விளங்குகின்றன. எந்த இடத்தில் இருப்போரும் இனிது கேட்குமாறு ஒலிபெருக்கிகள் சீராக அமைக்கப்பட்டிருக்கின்றன. குறித்த நேரத்திற்கு முன்னதாகவே தமிழ் அன்பர்களும் கூட்டங் கூட்டமாக வந்து மண்டபத்தில் எள்விழ இடமின்றிக் குழுமி இருக்கிறார்கள். அண்மையிலுள்ள பல்கலைக் கலாசாலை மாணவர்கள் சிந்தைக்கினிய செவிக்கினிய விருந்துண்ணும் ஆவலால் கூட்டத்தைத் தள்ளிக்கொண்டு முன்னேறி வருகிறார்கள். கலாசாலை மாணவிகள் பன்னிற ஆடைகள் மிளிரக் குறிப்புப் புத்தகமும் கையுமாக ஒரு மருங்கில் வீற்றிருக்கிறார்கள். சைவப் பெண்மணிகள் நாற்றிசையிலிருந்தும் ஏராளமாகத் திரண்டு வந்து மணிமண்டபத்தை அணிசெய்கிறார்கள். பத்திரிகை நிருபர்கள், அன்றைய நிகழ்ச்சிகளை அறிய ஆவலுடன் காத்திருக்கும் தமிழுலகுக்குச் செய்திகளை அனுப்பப் பேனாவும் புத்தகமும் கொண்டு தயாராகக் காத்திருக்கிறார்கள். படம்பிடிப்போர் அன்றைய அரிய சம்பவங்களைப் படம்பிடிப்பதற்காகச் சரியான இடங்களைத் தேடி அலைகிறார்கள். |
நமது அரசாங்கத்தின் தலையாயநிலையிலுள்ளோர் கவரிவீச, மலராலும், பட்டாலும் அலங்கரிக்கப்பட்ட பெரியபுராண விரிவுரையும் அதன் ஆசிரியப் பெருந்தகையும் யானை மீது நான்கு வீதியும் பவனிவந்து மண்டபத்தை அடைகிறார்கள். மங்கல வாத்தியங்களும், சிவநாம முழக்கமும், மக்களின் வாழ்த்தொலியும் கடலோசை என எழுந்து விண்ணைப் பிளக்கின்றன. எத்தகைய ஆரவாரம்! எவ்வளவு குதூகலிப்பு!! அதைக் கண்ணுற்ற ஆயிரம் கற்கால்களுமே முன்னைவிட ஒரு முழம் உயர்ந்து காணப்படுகிறதென்றால் நமது மகிழ்ச்சிக்கு எல்லையுண்டா? |