திருத்தொண்டர் புராணமும் - உரையும்3

திருச்சிற்றம்பலம்
இரண்டாம் பதிப்பின் முன்னனுரை
     திருத்தொண்டர் புராண உரை வரிசையில் ஆளுடைய பிள்ளையார் புராணப் பாடல்களின் உரையின் முதல் பாகமாகிய இந்த நான்காம் பகுதி 19-12-1948ல் உரையாசிரியர் அவர்களால் முதன்முதலில் வெளியிடப் பெற்றது. அதன் பிறகு இருபத்திரண்டு ஆண்டுகள் ஐந்து திங்கள் கழித்து இந்த நான்காம் பகுதியின் இரண்டாம் பதிப்பு ஆளுடைய பிள்ளையாரின் திருநாளாகிய இன்று வெளிவருவது திருவருளினாலாகும்.
     இடையிட்ட இந்த நீண்ட கால எல்லையில் இவ்வுரை நூலின் முற்பகுதிகள் முற்றும் செலவாகிவிட்டன. விரும்பிக் கேட்கும் பல அன்பர்களுக்கு உரை நூற்பகுதிகள் முற்றும் கொடுக்க இயலாதாயிற்று. காலமாறுதலால் அச்சுக்கூலி, காகித விலை கட்டிடக்கூலி போன்றவையும் ஏனைய பிற செலவுகளும் பன்மடங்கு உயர்ந்து மறுபதிப்பு வேலையை அரியதாக்கின. ஆயினும் தமிழ் மறுமலர்ச்சியும் சமயத்துறையில் விழிப்பும் வியக்கத்தக்க அளவு நாட்டில் வளர்ந்து இவ்வுரை நூற்பகுதிகளை விரும்பி வேண்டும் அன்பர்கள் கூட்டமும் பெருகிற்று. அவர்களது இடையறா வற்புறுத்தலையும் உற்சாகத்தையும் காரணமாக்கித் திருவருள் உண்ணின்று ஊக்குவிக்கும் துணைகொண்டு இவ்வுரை நூல்களின் மறுபதிப்பை பத்தாண்டுகளின் முன்பு உரையாசிரியர் அவர்களே தமது இறுதி நாட்களில் தொடங்கி வைத்தார்கள். அதன் தொடர்ச்சியாக இப்பகுதியின் மறுபதிப்பு இப்பொழுது வெளிவருகின்றது.
     இவ்வுரை நூல்களின் மறுபதிப்புக்கள் சைவத் திருவாளர் மு. நாராயணசாமி முதலியார் அவர்களால் தமது முருகன் அச்சகத்தில் திருத்தமும் வனப்பும் பெற அச்சிட்டு உதவப் பெறுகின்றன. ஆளுடைய பிள்ளையார் புராண உரைப்பகுதி எனும் சிறப்புப்பற்றி இப்பகுதி மேலும் அழகுற அமையும்படி எழுத்துக்களை முற்றும் புதியனவாக வார்த்து அச்சிட்டுள்ளார்கள். அவர்களுக்கு எனது கடப்பாடுடைய நன்றி உரித்தாகுக.
     இவ்வுரை நூல் வரிசையில் ஏனைய பகுதிகளின் மறுபதிப்புக்களும் விரைவில் வெளிவரத் துணைபுரியும்படி திருவருளை வழுத்துகின்றேன்.
சேக்கிழார் நிலையம்}
கோயம்புத்தூர் - 1
10-06-1971
 
க. மங்கையர்க்கரசி