இந்திய மொழிகளிலே செய்யுள் நடைக்கும் உரை நடைக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. தமிழிலும் அப்படியே யிருக்கிறது. உரைநடை பேச்சுநடையை ஒத்திருக்கும். ஆகவே செய்யுள் நடையின் பொருளை அறிவதற்கு அதனை உரை நடையில் எழுதுவது இன்றியமையாத செய்கை ஆகிவிட்டது. கற்றோரே அன்றிக் கல்வியில் தேராதார் செய்யுள் நூல்களை எளிதில் அறியமுடியாது. இதனை உத்தேசித்துத் தமிழ்ச்செய்யுள் நூல்களுக்கு எல்லாம் உரைகள் எழுதுவது நெடுங்கால வழக்கு. மேலும், உரை நடை வெளிப்படையான பொருளைப் பெற்றிருக்கும். செய்யுளோ சுருங்கச் சொல்லல், அழகுபடுத்துல் முதலிய பெருமைகளைக் கொண்டிருக்கும். அந்தப் பெருமைகளை எடுத்து விவரிக்காமல் இருந்தால் இந் நூலாசிரியனுடைய கருத்துக்களை முழுதும் அறியமுடியாது. ஆகவே விரிவுரைகள் ஒவ்வொரு செய்யுள் நூலுக்கும் தோன்றி வருகின்றன. சில நூல்கள் விரிந்த உரைகளையும், சில சுருங்கிய உரைகளையும் கொண்டிருப்பது வழக்கம். திருக்குறளின் உரைகளிலே பரிமேலழகர் உரைக்கும் மணக்குடவர் உரைக்கும் உள்ள வேறுபாடு கண்டு அதனை அறியலாம். |
திருமுறைகளில் தேவாரங்களுக்கு உரை எழுதப்படாது என்ற ஒரு கருத்து உண்டு. அவைகள் புகழ் நூல்கள் ஆனவகையில் வேண்டாம் போலும். உரை எழுதிவிட்டால் ஆசிரியருடைய கருத்தை ஒருவேளை குறுக்கிவிடுவோமோ என்ற பயத்தாலும் அக்கருத்துத் தோன்றியிருக்கலாம். ஆனால் மற்ற திருமுறைகளுக்கு அவ்விதத் தடையில்லை. பல உரைகள் திருவாசகம், திருக்கோவையார், திருமுருகாற்றுப்படை முதலிய நூல்களுக்கு இருக்கின்றன. அதுபோலவே பெரியபுராணத்திற்கு யாதொரு தடையும் இல்லை. பல பெரியார்கள் இதுவரை எழுதி இருக்கிறார்கள். சில அறிஞர்கள சிற்சில பகுதிகளுக்கும், சிற்சிலர் முழுவதிற்கும் எழுதியுள்ளார்கள். அவைகளிலே சிவக்கவிமணி அவர்கள் சென்ற பதினான்கு ஆண்டுகளாகப் பெரும் முயற்சிகள் எடுத்துக்கொண்டு வெளியிட்டுவரும் பேருரை எல்லாவற்றிலும் சிறந்தது. அதனை தமிழ் உலகம் போற்றக் கடமைப்படடுள்ளது. |
தமிழ் நூல்களுக்கு உரை எழுதின ஏனைய அறிஞர்கள் எடுத்து எழுதாத சில சிறப்புக்கள் இவ்வுரையில் உள்ளன. சரிதக்குறிப்புக்கள்; தலக்குறிப்புக்கள், தலப்படங்கள், பிரயாணப்படங்கள், சுவாமிகளின் உருவங்கள், கோயில்களின் புகைப்படங்கள், விளக்க உரைகள், எடுத்துக்காடடுக்கள், மேற்கோள்கள், அணிநயங்கள், சொல் நயங்கள், பொருள் நயங்கள், சாத்திரக் கருத்துக்கள், கருத்துரைகள், படிப்பினைகள், பிறர் கருத்துக்கள், பிற சமயக்கொள்கைகள், மாறுபட்ட நுணுக்கங்கள் மேல்நாட்டு அபிப்பிராயங்கள் முதலிய பலவும் இங்குக் காணலாம். இதுவரையில் கிடைத்திருக்கும் எட்டுப் பிரதிகளையும் தன்னிடம் இருந்த ஓர் அருமையான பிரதியையும் ஒத்திட்டுப் பாட பேதங்களைக் குறித்து அவைகளில் சிறந்தவற்றைக் கொண்டும் உரைகளில் சிறந்த அறிஞர்களான சதாசிவம் செட்டியார், இலக்கணத் |