வாழந்தணரும், உத்தமகுணமிக்க பெரியாரும், பண்டித சிரேஷ்டரும் ஆகிய பிரம்மஸ்ரீ ஞானமூர்த்தி தீட்சிதர் அவர்களைத் தலைமை தாங்கும்படி பிரம்ம ஸ்ரீ சச்சிதானந்த தீட்சிதர் பிரேரேபிக்க, அவர்கள் தலைமை தாங்கினர். தேவாரத்துடன் கடவுள் வணக்கம் செய்யப்பட்டபின், தலைவர் தக்கதோர் முன்னுரை நிகழ்த்திச் சபையைத் தொடங்குவித்தனர். திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் வைத்தீத்சுவரர் கோயிற்கட்டளை ஸ்ரீமத் சோமசுந்தரத் தம்பிரான் சுவாமிகள் உரையாசிரியரை ஆசீர்வதித்து மேற்படி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மகாசந்நிதானங்கள் அருளுடன் அனுப்பிய திருவருட் பிரசாதங்களையும் மாலையையும் சாத்திப் பரிவட்டமாகிய பட்டுப் பீதாம்பரத்தையும் சாத்தி யருளியதோடு மேற்படி ஆதீனத்தின் ஆசீர்வாத உரையினையும் வாசித்தருளினார்கள். பின் உரையின் சிறப்பையும் உரையாசிரியரையும் பாராட்டிப் பேசியதோடு, இனி அச்சேற எஞ்சிநின்ற 1700 பாட்டுக்களின் உரையும் விரைவில் அச்சிட வேண்டிய ஏற்பாடுகளைச் சைவ நன்மக்கள் ஆலோசித்து அன்றைக்கே ஒரு திட்டம் வகுக்க வேண்டுமென்று அரியதோர் சொற்பொழிவாற்றினார்கள். அதன்பின், மதுரை ஸ்ரீ திருஞானசம்பந்த சுவாமிகள் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மகா சந்நிதானங்கள் அருளுடன் அனுப்பிய அருட் பிரசாதங்களை மேற்படி ஆதீனம் ஸ்ரீமத் சண்முக சுவாமிகள் வழங்கிப் பரிவட்டமாகப் பட்டுப் பீதாம்பரத்தையும் உரையாசிரியருக்கு அணிந்து, மாலை சாத்தி, மேற்படி மகா சந்நிதானங்களின் ஆசியுரையினையும் வாசித்தருளினார்கள். அதன்பின் (இலங்கை) ஈழநாட்டு யாழ்ப்பாணத்திலிருந்து சைவ பரிபாலன சபையின் பிரதிநிதியாக மேற்படி சபையின் தனாதிகாரி திரு. இராசநாயகம் அவர்கள் உரையாசிரியருக்குப் பூமாலை சூட்டிப் பட்டுப் பீதாம்பரங்கள் சன்மானம் செய்தபின் ஈழநாட்டுச் சைவ மக்கள் சார்பாக யாழ்ப்பாணம் நவாலியூர் - திரு. க. சோமசுந்தரப் புலவர் இயற்றிய வாழ்த்துப்பாட்டுப் பத்திரமும், யாழ்ப்பாணம் ஸ்ரீமத் குமாரசாமிக் குருக்கள் அவர்கள் எழுதிய உரைநடை வாழ்த்தும் வாசித்தளிக்கப்பட்டன. அதன்பின் சென்னைச் சிவனடியார் திருக் கூட்டத்தினர், சென்னைச் சைவ சமய பக்தஜனசபையார், சென்னைச் சைவ சித்தாந்த மகா சாமாஜத்தினர், வாலாஜாபாத் சைவசபையார், இவர்கள் சார்பாகப் பாராட்டுப் பத்திரங்களைச் சென்னை, சைவத் திருவாளர் ஆர். சண்முகசுந்தரஞ் செட்டியார் அவர்கள் வாசித்தளித்துத் தக்கதோர் சொற்பொழிவும் நிகழ்த்தி வாழ்த்தினர். அதன்பின் சென்னை அரசாங்க மந்திரிமார்கள் திரு. எம். பக்தவத்சலம் அவர்கள், கனம் கல்வி மந்திரியாக திரு. டி. எஸ். அவிநாசிலிங்கம் அவர்கள், H. R. E. Bd. தலைவர் திரு. டி. எம். சின்னையா பிள்ளை அவர்கள், சென்னை இராவ் பகதூர் வி. எஸ். செங்கல்வராய பிள்ளை அவர்கள், திவான்பகதூர் திரு. ஆர். வி. கிருஷ்ணையர், சி. ஐ. இ. அவர்கள், மதுரை திரு. கோபாலகிருஷ்ணக் கோன் அவர்கள், சைவத்திரு. எஸ். சச்சிதானந்தம் பிள்ளை அவர்கள் முதலியோர்கள் அனுப்பிய வாழ்த்துக் கடிதங்கள் வாசிக்கப்பட்டன. தூத்துக்குடி சைவ சித்தாந்த சபை, கோவைத் தமிழ்ச் சங்கம். திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் முதலியவற்றின் சார்பாக வந்தனவும் தருமை ஆதீனம் வித்வான் பாலகவி, திரு. வயிக்கரம் வெ. இராமநாதன் செட்டியார் அனுப்பியதும், ஆகிய வாழ்த்துப்பாக் கடிதங்கள் வாசிக்கப்பட்டன. மற்றும் அநேக நண்பர்கள் எழுதிய வாழ்த்துக் கடிதங்களும் குறிக்கப்பட்டன. அதன்பின், அம்மை ஸ்ரீமதி புஷ்பம் நடராஜன் அவர்களும், ஸ்ரீமதி எஸ். இராஜேஷ்வரியம்மை அவர்களும் அழகிய சொற்பொழிவாற்றி, இந் நிகழ்ச்சியை இன்னும் |