6முன்னுரை

பிரசித்தப் படுத்திச் சுவடிகளை யானைமேலேற்றி நகர்வலம் செய்வித்து உலகறியப் பெருஞ்சிறப்புச் செய்திருத்தல் வேண்டுமென்ற கருத்துப்பட மிக்க ஆர்வத்துடன் பேசியதுடன், உரையாசிரியரின் மனைவியார் ஸ்ரீமதி மீனாட்சியம்மையாருக்குச் சபையாரறிய மாலை சூட்டி மகிழ்ந்தனர். சிதம்பரம், பழக்கடை, சைவத்திரு. முத்துக்கிருஷ்ண பிள்ளையவர்கள் உரையாசிரியரைப் பாராட்டி வெண்பொன்னாற் செய்தமைத்த ஸ்ரீ நடேசப் பெருமான் திரு வுருவமுள்ள படம் ஒன்றைப் பரிசளித்தனர். அதன்பின், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர்களான வித்வான்கள் திரு. ஒளவை துரைசாமி பிள்ளையவர்களும், திரு. வெள்ளைவாரணர் அவர்களும், ஆர். எஸ். ஸ்கூல் தலைமையாசிரியர் திரு. பு. ரா. சாமிநாதன், பி.ஏ., எல்.டி. அவர்களும் மற்றும் பல அன்பர்களும உரைச் சிறப்புக்களைப் பாராட்டி உரையாசிரியரை வாழ்த்தினர்.
     அதன்பின், ஸ்ரீமத் சோமசுந்தரத் தம்பிரான் சுவாமிகள் பிரேரேபணையின் பேரில், எஞ்சிய பகுதிகளை விரைவில் அச்சிடுவதற்காக மேற்படி உரை வெளியீட்டுக் கழகம் என ஒன்று தாபிக்கப் பெற்றது. அதற்குக் கும்பகோணம் உயர் சைவத் திரு. பி. டி. குமாரசாமி செட்டியார் அவர்கள் தலைவரும் பொக்கிஷத்தாரும்; ஸ்ரீமத்சோமசுந்தரத் தம்பிரான் சுவாமிகள் அமைச்சர்; திரு. பு ரா. சுவாமிநாதன், ஸ்ரீமதி நடராஜன் அம்மையார் முதலியவர்கள் அங்கத்தினர்கள் ஆவார்; செயல் முறையாவது அங்கத்தினர்கள் ஒவ்வொருவரும் ரூ. 75 கொடுத்து இப்போது வெளிவந்துள்ள 3 வால்யங்களையும் உடனடியாகப் பெற்றுக் கொள்ளவும், இனி வரும் 4 வால்யங்களையும் அவ்வப்போது பெறவும் உரியவர்கள். இவ்வாறு 150 அங்கத்தினர்கள் சேர்ந்து மேற்படி எஞ்சிய அச்சுவேலையை நிறைவாக்கவேண்டும். இன்னும் இதற்கான ஏற்பாடுகள் ஒழுங்கு செய்யப்பட்டன. உரையாசிரியர் எல்லாருக்கும் ஏற்றவாறு நன்றி கூறினார்கள்; உரை நிறைவின் அறிகுறியாக வெளியிட்ட வெள்ளானைச் சருக்கத்தின் இறுதிப்பதினான்கு செய்யுட்களின் உரைப்பகுதியைச் சபையில் சமர்ப்பித்துச் சில பகுதிகளை உரைவிரித்துக் கூறினார்கள். இந்நிகழ்ச்சியின் நினைவுக்குறியாக உரையாசிரியரது "வாழ்க்கைத்திறன்" என்ற பெயருடன் ஒரு வரலாறு, கோவை அன்பர் - இராவ்பகதூர் திரு. சி. எம். இராமச்சந்திரஞ் செட்டியாரவர்களால் எழுதி அச்சிட்ட வெளியீடு அன்பர்களுக்கு வழங்கப்பட்டது.
     சபை நிறைவில் தலைவர் அவர்கள் தகுந்தபடி முடிப்புரை கூறித் தில்லைவாழந்தணர்களது ஒத்துழைப்பையும் ஆசியையும் தெரிவித்து நன்றி கூறினார்கள்.
     சபை நிகழ்ச்சியினிடையில் பேரம்பலத்தினின்றும் பொதுவார்கள் சார்பாக தேவஸ்தான மரியாதையாகச் சகல விருதுகளுடன் ஸ்ரீசபா நாயகரது குஞ்சிதபாதம், திருநீறு, புஷ்பம் முதலிய திருவருட் பிரசாதங்களைக் கொணர்ந்து உரையாசிரியருக்கு வழங்கினார்கள். மங்கல வாழ்த்துடன் இரவு 11 மணிக்குச் சபை நிறைவாயிற்று.
     இத்திருப்பணி நிறைவில் ஒரு தெய்விகத் திருவருளமைப்பு இருப்பதாகக் கருத இடமுள்ளது. அஃதாவது இப்புராண உரை எழுதத் தொடங்கிய ஆண்டிலேயே சுந்தரமூர்த்தி நாயனார் சேரமான் பெருமாணாயனார் குருபூசை விழாப்பற்றித் திருவஞ்சைக்களத்துக்கு உரையாசிரியரது யாத்திரையும் தொடங்கிற்று; அத்திருவிழாவும் அத்திருக்கோயிலிற் புதிதாகத் தொடங்கியதுதான். அவ்விழாவும் இப்பதினான்கு வருடங்களும் இடையறாது உரையாசிரியரும், அவருடன் சேக்கிழார்