|
முன் சேர்க்கை - 3 |
கல்வெட்டுக்களில் இச்சரிதப் பகுதியின் ஆதரவு |
1. 1020 - A. D. இராஜேந்திர சோழர் - 7-ம் ஆண்டு - தஞ்சை - நன்னிலம் - திருவிடைவாய் - கோயில் முன்வாயிற் சுவர் - விடையபுரம் என்ற விருதராச பயங்கர புரத்து வியாபாரிகள், அப்பதியில் சொக்கக் கூத்தர், நாச்சியார், திருஞானம் பெற்ற நம்பி இவர்களது பிரதிமைகளைத் தாபித்துப் பூசை நடத்த ஏற்பாடு செய்தது; இத்தலத்தில் தான் கல்வெட்டில் திருமுறைப் பதிப்புக்களில் முன் கிடைக்காத, ஆளுடைய பிள்ளையாரது "மறியார் கரத்தெந்தை" என்ற பதிகம் என்ற பதிகம் கண்டு பிடிக்கப்பட்டது. இது சேக்கிழார் காலத்துக்கு முந்தியது. |
2. 1224 - A. D. இராசராசர் lll-9வது ஆண்டு - மன்னார்குடி - கோட்டூர் - கொழுந்தீசர் கோயில் - கொழுந்தாண்டார் ஆலயத்தில் திருஞானம் பெற்ற பிள்ளையார் கோயிலுக்கு நாகமங்கலமுடையான் அம்பலவன் கோயில் கொண்டான் பணம் உதவியது 450/1912. |
3. 1234 - A. D. இராசராசர் lll - 18-ம் ஆண்டு - மேற்படி ஆலயத்தில் தாபிக்கப்பெற்ற திருஞானம் பெற்ற ஆளுடைய பிள்ளையார் சந்நிதிக்குப் பூதானம் - 485 - 1912. |
4. 1267 - A. D. (44 - 2-1267) இராசேந்திரச் சோழர் lll-28-ம் ஆண்டு - பட்டுக் கோட்டை - கோவிலூர் என்ற திரு உசாத்தானம் கோயில்; மும்முடிச் சோழபுரத்து வியாபாரி தாபித்த திருஞானம் பெற்ற பிள்ளையார் நித்தியப் படித்தரத்துக்குப் பூதானம். 161 - 1908. |
5. 22-2-1198 - A. D. சடாவர்மன் வீரபாண்டியன் 9-வது ஆண்டு திருஞானம் பெற்ற பிள்ளையாரை எடுப்பித்து நிபந்தங்களுக்குப் பணமும் தேவாரம் ஓதுதற்குப் பணமும் சிவநெறி காட்டினார் தந்தது. (பிரான் மலை 208 - 24) |
6. திருஞானம் - என்ற பெயர் தனியாகவே சில கல்வெட்டுக்களிற் காணப்படுகின்றது. |
7. பிள்ளையார் அவதரித்த சீகாழிப் பதியில் அவரது தனிக் கோயிலில் 11- தான சாசனக் கல்வெட்டுக்கள் உண்டு; ஆனால் அவை இச்சரிதப் பகுதி பற்றியன வல்ல. |
இனிச் சரிதத்தின் ஏனைப் பகுதிகளைப்பற்றிய கல்வெட்டு ஆதரவுகளும், திருமுறை ஆதரவுகளும் அவ்வப் பகுதிகளில் இயன்ற அளவு குறிக்கப்பெறும். |
நம்பியாண்டார் நம்பிகள் அருளிய நூல்களில் ஆளுடைய பிள்ளையார் சரிதத்தின் பற்பல பகுதிகளின் ஆதரவுகள் விளங்குகின்றன. அவை ஆசிரியருக்குப் பேராதரவாயிருந்தன என்பது புராணப் பாயிரத்தாலும் அறியவுள்ளது. |
குறிப்பு :- மேலே குறித்த கல்வெட்டு ஆதரவுகள் எனது அறிய நண்பர் திரு. இராவ்பகதூர் C. M. இராமச்சந்திரன் செட்டியார், B. A., B. L., F. R. G. .S, F. M. U. அவர்களால் அன்புடன் உதவப்பட்டன. |