பக்கம் எண் :

முதற் காண்டம்10

அடவியால் வனப்பில் வாய்ந்த ஆகிர்த எனும் நகர்க்குள்,
புடவியால் உவமை நீத்த புகழ் வரத்து உயர்ந்த கன்னி,
நடவி, ஆர் தவத்தில் ஓங்கி, நாதனை ஈன்றாள் தாளைத்
தடவி, ஆர்வு உயரப் போற்றி, தகவு அடைந்து இருந்தாள்                                          அன்றோ.

    சோலைகளால் அழகு வாய்ந்தது ஆகிர்த என்னும் நகரம். உலகத்தில்
ஒப்புமை கடந்த புகழுள்ள வரங்களால் உயர்ந்த ஒரு கன்னிகை
அந்நகர்க்குள் வாழ்ந்தாள். அவள் ஒழுக்கமாய் நடந்து, நிறைந்த தவத்தில்
உயர்ந்து, ஆண்டவனைப் பெற்றெடுத்த கன்னி மரியாளின் பாதத்தைத்
தடவி, அன்பு உயரப் போற்றி, மேன்மை பெற்று இருந்தாள்.

    'அன்றோ' அசைநிலை. இவளே தன் ஊர்ப்பெயருங் கூட்டி ஆகிர்த
மரியாள் என அழைக்கப் படுவாள். ஆர்வு - ஆர்வம்.
            
                        8
பொறையுழி சிறப்பில் வாய்ந்த புலன்றவிர் காட்சி தன்னா
லறைமொழி யினிமை கான்ற வருளவிழ் வாயி னாளே
நிறைமொழி மாந்தர் பூத்த நீர்மையோ டொழுகல் செய்து
மறைமொழி வாய்மை காட்டு மாண்புடை யறத்தி னாளே.
 
பொறை உழி சிறப்பில் வாய்ந்த, புலன் தவிர் காட்சி தன்னால்,
அறை மொழி இனிமை கான்ற அருள் அவிழ் வாயினாளே;
நிறை மொழி மாந்தர் பூத்த நீர்மையோடு ஒழுகல் செய்து,
மறை மொழி வாய்மை காட்டும் மாண்பு உடை அறத்தினாளே.

   அவள் இவ்வுலகில் சிறப்பாய் வாய்க்கப் பெற்ற, ஐம்புலன்களுக்கு
அப்பாற்பட்ட தெய்வக் காட்சியினால், தான் சொல்லும் சொல்லில் இனிமை
தோய்ந்த கருணை மலரும் வாயை உடையவள்; தத்துவப் பொருள் நிறைந்த
சொல்லை உடைய மனிதராகிய முனிவர்களிடம் காணப்படும் புண்ணிய
இயல்போடு நடந்து, வேத வாக்கின் உண்மையைத் தன் வாழ்க்கையால்
காட்டும் மாண்பு கொண்ட அறத்தை உடையவள்.

   'நிறை மொழி மாந்தர்' என்பது ஒரு சொல்லாய் முனிவரைக் குறிக்கும்.