பக்கம் எண் :

முதற் காண்டம்100

     எருசலேம் என்னும் திரு மாநகரில் நீரே அலைபடுவதல்லாமல்,
வேறு அலைச்சல் இல்லை; நிறைந்த சிறந்த பொருளை இரவலர்க்கு
இடுவாரிடையே எழும் போட்டிப் போரேயல்லாமல், பகையால் எழும்
போர் இல்லை; தாரையாக வானத்தினின்று மழை பொழியும் கருமேகமே
கறை கொண்டுள்ளதல்லாமல், மக்களிடையே எவ்விதக் கறையும் இல்லை.
குற்றங்களைக் கடிவதற்கான காவலும் அறவுணர்வினால் சீர்
பெறுவதேயல்லாமல், சிறைக்காவல் என்பது இல்லை.

     கொடையைக் கொள்வார் இல்லாத நாடு (64) ஆதலின், அரிதாகக்
கொள்ளவருவார்க்கு நான் முந்தி நீ முந்தியென்று கொடுத்தலிற் போட்டி
எழுகின்றது.
 
                      67
மின்னாரினி திசைபாடலில் விளையின்பது பெரிதோ
பொன்னார்குழல் புகரின்பது பெரிதோகலை புரிநூல்
சொன்னாரவ ருரையின்பது பெரிதோபொழி துளிக
ளன்னார்நிறை கொடையாற்பொரு ளருளின்பது பெரிதோ
 
மின்னார் இனிது இசை பாடலில் விளை இன்பு அது பெரிதோ?
பொன் ஆர் குழல் புகர் இன்பு அது பெரிதோ? கலை புரி நூல்
சொன்னார் அவர் உரை இன்பு அது பெரிதோ? பொழி துளிகள்
அன்னார் நிறை கொடையால் பொருள் அருள் இன்பு அது பெரிதோ?

     அந்நகரில் மின்னல் போன்ற மகளிர் இனிமையாக இசை பாடுவதனால்
விளையும் இன்பம் பெரிது என்போமோ? பொன் வேலைப்பாடு நிறைந்த
புல்லாங்குழல் இசையைப் புகல்கின்ற இன்பம் பெரிது என்போமோ? கலை
நூல்களைக் கேட்பார்க்குப் புரிய எடுத்துச் சொன்ன புலவர் தம் உரை தரும்
இன்பம் பெரிது என்போமோ? பொழியும் மழையைப் போன்ற கொடையாளர்
நிறைவான கொடையால் பொருளை அருளோடு தரும் இன்பம் பெரிது
என்போமோ?

     'இன்பது' என்ற தொடரில் 'அது' என்பதும், 'சொன்னார் அவர்' என்ற
தொடரில் 'அவர்' என்பதும் பகுதிப் பொருள் விகுதிகள். 'துளி' என்பது
மழைக்கு ஆகுபெயர். 'புகர்' என்பது 'புகல்' என்பதன் கடைப்போலி.