65 |
கோவீற்றுறை
தனிநாதனைக் குறையாப் புக ழிடவும்
நாவீற்றுறை கலையாயவு நறுமாணறஞ் செயவும்
பாவீற்றுறை யிசை பாடவும் பதமாடவும் படரும்
பூவீற்றுறை நகராங்கிரு பொழுதாயின வினிதால். |
|
கோ
வீற்று உறை தனி நாதனைக் குறையாப் புகழ் இடவும்,
நா வீற்று உறை கலை ஆயவும், நறு மாண் அறம் செயவும்,
பா வீற்று உறை இசை பாடவும், பதம் ஆடவும், படரும்
பூ வீற்று உறை நகர் ஆங்கு இரு பொழுது ஆயின இனிதால். |
வானத்தில்
வீற்றிருக்கும் ஒரே ஆண்டவனுக்குக் குறையில்லாத
புகழைச் செலுத்தவும், நாவில் வீற்றிருக்கும் கலைகளை ஆராயவும், நல்ல
மாண்புள்ள அறச் செயல்களைச் செய்யவும், பாக்களாக வீற்றிருக்கும் இசைப்
பாடல்களைப் பாடவும், காலால் நடனம் ஆடவுமாக, பரந்து கிடக்கும்
பூவுலகில் வீற்றிருக்கும் அந்நகரிடத்துப் பகல் இரவாகிய இரு பொழுதும்
இனிதே கழிந்தன.
வீற்றிருத்தல்
- வீறு பட இருத்தல் : பெருமையோடு இருத்தல்.
'நாதனை ... இடவும்' என்ற இடத்து நான்காம் வேற்றுமை இரண்டாம்
வேற்றுமையாக வந்த உருபு மயக்கம். பதம் - 'பாதம்' என்பதன்
குறுக்கல் விகாரம்.
66
|
நீரல்லது
மலையில்லது நிறைவான்பொரு ளிடுவார்
போரல்லது பகையில்லது புரிவான்மழை பொழியுங்
காரல்லது கறையில்லது கடிகாவலு மறனாற்
சீரல்லது சிறையில்லது திருமாநக ரிடையே. |
|
நீர்
அல்லதும் அலை இல்லது; நிறை வான் பொருள் இடுவார்
போர் அல்லது பகை இல்லது; புரிவான் மழை பொழியும்
கார் அல்லது கறை இல்லது; கடி காவலும் அறனால்
சீர் அல்லது சிறை இல்லது திரு மா நகர் இடையே. |
|