பக்கம் எண் :

முதற் காண்டம்98

     இன்று இருந்து நாளை மறையும் இயல்புள்ள செல்வங்களை
இவ்வுலகில் இரவலர்க்கு இன்முகத்தோடு அன்புடன் கொடுத்தலால்,
பருந்தோடு தொடர்ந்து செல்லும் அதன் நிழல் போல், உயர்ந்த வான்
வீட்டில் அவை பயன் தருதல் உறுதி யென்று தெரிந்து, அமுதத்தோடு
போட்டியிடும் அரிய அன்பு உள்ளத்தில் மலிந்து கிடக்கின்ற அந்நகரத்து
உயர்குடி மக்கள், விருந்தோடு தாமும் இருந்து உண்பதற்கு வாய்ப்பாக
வருகின்றவர் இல்லையே என்று மனம் சோர்வர்.

     ஈன்றன - ஈனுதல் உறுதி யென்று காட்ட, எதிர்காலம், இறந்த
காலமாக அமைந்த கால வழுவமைதி. ''விருந்து புறத்ததாத் தானுண்டல்
சாவா, மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று'', என்ற குறள் (82) ஈண்டு
நினைக்கத் தக்கது.
  
                   64
தெள்வாருரை முகிலுங்கட றிரையுங்கெட முகியா
வள் வார்முர சதிர்மாநகர் வயின்வாழ்பவர் கொடையைக்
கொள்வாரில குறையல்லது குறையில்லது மெனவே
கள்வாரில கடையாரில கழிவாரில நயவார்
 
தெள் வார் உரை முகிலும் கடல் திரையும் கெட, முகியா
வள் வார் முரசு அதிர் மா நகர் வயின் வாழ்பவர், கொடையைக்
கொள்வார் இல குறை அல்லது குறை இல்லதும் எனவே
கள்வார் இல, கடையார் இல, கழிவார் இல நயவார்

     தெளிந்த நீண்ட முழக்கம் கொண்ட மேகமும் கடல் அலையின்
ஓசையும் கெடுமாறு, வன்மையான வாரால் கட்டப்பட்ட முரசு ஓயாமல்
முழங்கும் அப்பெரிய நகரில் வாழ்வோர், கொடையைப் பெற்றுக்கொள்வார்
இல்லையென்ற ஒரு குறையே அல்லாமல் வேறு குறை ஒன்றும்
இல்லையென்று சொல்லத்தக்க வகையில், களவு செய்வார் இல்லாமலும், கீழ்
மக்கள் இல்லாமலும், தீயவர்கள் இல்லாமலும், மகிழ்வார்.

     'குறையில்லதும்' என்பதனைக் 'குறையும் இல்லது' எனப் பிரித்துக்
கூட்டுக. 'நயவார்' என்ற சொல் பகர இடைநிலை பெற்று உடன்பாடும்
(நாயப்பார்) வகரம் இடையே பெற்று எதிர் மறையும் (நயவார்) சுட்டுதல்
மரபு. இங்கு மாறிவந்திருப்பினும், உடன் பாட்டுப் பொருளே கொள்க.