பக்கம் எண் :

முதற் காண்டம்101

                     68
சிலையொத்தன நுதலார்மனச் சிறையொத்தன மதிள்கள்
கலையொத்தன வுயர்மாலைகள் கனமொத்தன கரிகள்
மலையொத்தன விரதந்திரள் வளியொத்தன பரிக
ளலையொத்தன கடைவீதிக ளலையொத்தன ரபயர்
 
சிலை ஒத்தன நுதலார் மனச் சிறை ஒத்தன மதிள்கள்.
கலை ஒத்தன உயர் மாலைகள். கனம் ஒத்தன கரிகள்.
மலை ஒத்தன இரதம். திரள் வளி ஒத்தன பரிகள்.
அலை ஒத்தன கடை வீதிகள். அலை ஒத்தனர் அபயர்.

     வில்லைப் போன்ற நெற்றியை உடைய மகளிர்தம் மன நிறையாகிய
சிறையை ஒத்திருந்தன அந்நகரத்து மதில்கள். உயர்ந்த மாளிகைகள்
கலையை ஒத்திருந்தன. யானைகள் கருமேகங்களை ஒத்திருந்தன. தேர்கள்
மலையை ஒத்திருந்தன. குதிரைகள் திரண்ட காற்றை ஒத்திருந்தன. கடை
வீதிகள் கடலை ஒத்திருந்தன. படை வீரரும் கடலையே ஒத்திருந்தனர்.

     ''சிறை காக்குங் காப்புஎவன் செய்யும்? மகளிர், நிறைகாக்குங்
காப்பே தலை,'' என்ற குறள் (57) இங்குக் குறித்த மனச்சிறையை 'நிறை'
எனக் குறிப்பிடுதல் காண்க.
 
                    69
பாநாணுப விசையோதைகள் பகல்நாணுப மணிகள்
பூநாணுப மதுவாரருள் புயல்நாணுப கொடைகள்
நாநாணுப கலைமாட்சிமை நசைநாணுப நிறைசீர்
கோநாணுப நலம்யாவிலுங் குறையாவளர் நகரம்
 
பா நாணுப இசை ஓதைகள். பகல் நாணுப மணிகள்.
பூ நாணுப மது. ஆர் அருள் புயல் நாணுப கொடைகள்.
நா நாணுப கலை மாட்சிமை. நசை நாணுப நிறைசீர்.
கோ நாணுப நலம் யாவிலும் குறையா வளர் நகரம்.

     இசைப் பாடல்களின் ஓசைகளைக் கேட்டுச் செய்யுட் பாக்களின்
ஓசைகள் நாணும். மணிகளின் ஒளிகளைக் கண்டு பகல் ஒளிகள் நாணும்.
நாட்டிலுள்ள மது வகைகளின் பெருக்கத்தைக் கண்டு பூக்களிலுள்ள தேன்
வகைகள் நாணும். நிறைந்த அருளால் நிகழும் கொடைகளைக் கண்டு கரு