பக்கம் எண் :

முதற் காண்டம்103

மூன்றாவது
 

 
வளன் சனித்த படலம்
 

     தாவீது மன்னன் மரபில் காப்பியத் தலைவனாகிய வளன் எனப்படும்
சூசை பிறந்த செய்தியைக் கூறும் பகுதி.

                    தாவீது மன்னன்
    
               1
அன்னமா திருநக ரகத்து டற்குயி
ரென்னமா தாவித னினிதில் வீற்றிருந்
தொன்னலார் வெருவுற வுவந்து பாவலர்
சொன்னபா நிகருமேற் றுளங்கி னானரோ.
 
அன்ன மா திரு நகர் அகத்து, உடற்கு உயிர்
என்ன, மா தாவிதன் இனிதில் வீற்றிருந்து,
ஒன்னலார் வெரு உற உவந்து பாவலர்
சொன்ன பா நிகரும் மேல் துளங்கினான் அரோ.

     அத்தகைய பெருமை வாய்ந்த எருசலேம் திரு நகரத்தில், உடலுக்கு
உயிர் போல, பெருமை வாய்ந்த தாவிதன் இன்பமாக அரசு வீற்றிருந்து,
பகைவர் அச்சங்கொள்ள, பாவலர் புகழ்ந்து சொன்ன பாடலின் நிகருக்கும்
மேலாக விளங்கினான்.

     'அரோ' அசைநிலை. முன் பாடலில், ''உடல் உருவே இடை உயிர்
நேர் .. அரசு,'' என்றது காண்க. (2 : 70).

   
                 2
அருளொடு வீங்கிய வகத்தி னான்றுளி
மருளொடு வீங்கிய மழைக்கை யான்மலர்ச்
சுருளொடு வீங்கிய தொடையல் மார்பினான்
பொருளொடு வீங்கிய பொறைப்பு யத்தினான்.