பக்கம் எண் :

முதற் காண்டம்104

அருளொடு வீங்கிய அகத்தினான்; துளி
மருளொடு வீங்கிய மழைக் கையான்; மலர்ச்
சுருளொடு வீங்கிய தொடையல் மார்பினான்;
பொருளொடு வீங்கிய பொறைப் புயத்தினான்.

     அவன் உயிர்களிடத்துக் கருணையால் நிறைந்த நெஞ்சம் படைத்தவன்;
துளிகளின் மிகுதியால் நிறைந்த மழைபோல் கொடுக்கும் கையை உடையவன்;
மலர்ச் சுருள்களால் நிரம்பக் கட்டிய மாலை அணிந்த மார்பு கொண்டவன்;
பொன் அணிகலன்களால் நிறைத்து மலை போல் திரண்ட புயங்களை
உடையவன்.

     பொருள் - பொன்; பொன் அணிகலன்களுக்கு ஆகுபெயர்.
 
                 3
ஒளிதவ ழசனியை யுமிழ்ந்த வில்லினா
னளி தவழ் நிழல்செயு மருட்கு டையினான்
வெளிதவழ் நவமணி விழுங்குந் தேரினான்
களிதவழ் மதம்பொழி களிற்றி னாண்மையான்.
 
ஒளி தவழ் அசனியை உமிழ்ந்த வில்லினான்;
அளி தவழ் நிழல் செயும் அருட் குடையினான்;
வெளி தவழ் நவ மணி விழுங்கும் தேரினான்;
களி தவழ் மதம் பொழி களிற்றின் ஆண்மையான்

     அவன் மின்னலின் ஒளி தவழும் இடியையே அம்பாகப் பொழிந்த
வில்லை உடையவன்; கருணை தவழும் நிழலைக் குடிகளுக்கு வழங்கும்
அருள் என்னும் குடையை உடையவன்; வெளிச்சம் தவழும் ஒன்பது வகை
மணிகளையும் விழுங்கும் தன்மையாய்ப் பதித்த தேரை உடையவன்; களிப்பு
தவழ்வதனால் மதம் பொழியும் ஆண் யானை போன்ற வீரம் படைத்தவன்.
 
                   4
மொய்முனர் பின்றிலா முரண்கொ டேறெனா
மெய்முனர் பொய்யென வெருவொன் னாரிவன்
கைமுனர் நிற்கிலா கலங்கிப் போற்றும் போர்
செய்முனர் செயஞ்செயுஞ் சிங்க வாகையான்,