10 |
வேலி
யாற்கது விடாத்திரு நகரெலா நடுங்க
மாலி யாற்கதிர் வகுத்தவா ளேந்தினர் நாப்ப
ணாலி யாற்கரிந் தகல்முகி லுருக்கொடு வேய்ந்த
கோலி யாற்றெனுங் கொடியதோ ரிராக்கத னெதிர்த்தான். |
|
வேலியால்
கது விடாத் திரு நகர் எலாம் நடுங்க,
மாலியால் கதிர் வகுத்த வாள் ஏந்தினர் நாப்பண்,
ஆலியால் கரிந்து அகல் முகில் உருக்கொடு வேய்ந்த
கோலியாற்று எனும் கொடியது ஓர் இராக்கதன் எதிர்த்தான். |
மதிலின் சிறப்பால்
பகைவர் நுழைய விடாத எருசலேம் திருநகர்
முழுவதும் நடுங்குமாறு, சூரிய ஒளியால் கதிர் பரப்பிய வாளை ஏந்தி
நின்ற பிலித்தையர் நடுவே, உள்ளே கொண்ட மழை நீரினால் கருநிறம்
பெற்றுப் பெருத்த மேகத்தைப் போன்ற உருவத்தைக் கொண்டு தோன்றிய
கோலியாற்று என்னும் கொடிய ஓர் அரக்கனும் எதிர்த்து நின்றான்.
கோலியாற்று
- கோலியாத்து. மழை மேகம் கரிய நிறத்தாலும் பெரிய
உருவத்தாலும் அவனுக்கு உவமை.
11
|
துளிசி
றைச்செயு முகில்புகு மிருமலை சுமந்த
வொளிசி றைச்செயு மொருகரும் பருவத மென்னா
வெளிசி றைச்செயும் வியனிரு புயத்துமேற் சிரமே
களிசி றைச்செயுங் கதங்கொடு வெருவுறத் தோன்றும். |
|
துளி
சிறைச் செயும் முகில் புகும் இரு மலை சுமந்த
ஒளி சிறைச் செயும் ஒரு கரும் பருவதம் என்னா
வெளி சிறைச் செயும் வியன் இரு புயத்து மேல் சிரமே,
களி சிறைச் செயும் கதம் கொடு வெரு உறத் தோன்றும். |
மழைத் துளியை
உள்ளடக்கிக் கொண்டிருக்கும் கருமேகம் வந்து
தங்கும் இரண்டு மலைகள் சுமந்து கொண்டிருக்கும், ஒளியை மூடி
மறைக்கும் ஒரு கரியமலை என்று சொல்லத்தக்க வகையில், வான
வெளியை மூடி மறைக்கும் பெரிய இரு புயங்களுக்கு மேல் அமைந்துள்ள
தலை, பார்ப்போர் களிப்பையெல்லாம் அடக்கக் கூடிய சினத்தைக் காட்டிக்
கொண்டு அச்சம் விளைவிக்கும் வகையில் தோன்றும்.
|