''திறம் கடுத்த
கொல் சிங்கமும் உளியமும் பாய்ந்து,
மறம் கருத்து அதிர் வல்லியத்து இனங்களும் எதிர்ந்து,
கறங்கு அடுத்த கால், கழுத்தினை முருக்கி நான் கொன்றேன்.
அறம் கெடுத்தவன் அவற்றினும் வலியனோ?'' என்றான். |
''வலிமையோடு
சினந்து கொல்லும் சிங்கமும் கரடியும் பாய்ந்து
வந்தும், கொடுமையோடு சினந்து முழங்கும் புலியினங்களும் எதிர்கொண்டு
வந்தும், காற்றாடி போல் சுழன்று என்னை அடுத்தபோது, அவற்றின்
கழுத்தை நெரித்து நான் கொன்றேன். அறத்தைக் கெடுத்தவனாகிய
இவ்வரக்கன் அவற்றைக் காட்டிலும் வலியவனோ?'' என்றான்.
''அல்லவை செய்தார்க்கு
அறம் கூற்றமாம்'' (சிலம்பு வழக்.) ஆதலின்,
அவனை வெல்லுதலும் கொல்லுதலும் எளிது என்பது கருத்து. சிறுத்தை
வேங்கை போன்று புலி பல வகையாதலின், 'வல்லியத்து இனங்கள்'
எனப்பட்டது.
24
|
அரிய
வாண்மையை யதிசயித் தரசனன் றென்னா
விரிய ளாவொளி வேலொடு தனதுபற் கருவி
யுரிய போர்செய ஒருங்குதந் தனனவற் றொடுதான்
றிரிய வாய்முறை தெரிகிலே லெனமறுத் தகன்றான். |
|
அரிய
ஆண்மையை அதிசயித்து அரசன், ''நன்று'' என்னா,
விரி அளாவு ஒளி வேலொடு தனதுபல் கருவி
உரிய போர் செய ஒருங்கு தந்தனன். ''அவற்றொடு'' தான்,
''திரிய வாய் முறை தெரிகிலேன்'' என மறுத்து அகன்றான். |
அரசன்
அவனது அரிய வீரத்தை அறிந்து வியப்புற்று ''நல்லது''
என்று இசைந்து, உரிய போருக்கு உதவவென்று விரிந்து பரவும் ஒளி
பொருந்திய தனது வேலோடு வேறு பல கருவிகளையும் ஒருங்கே
கொடுத்தான். தாவிதனோ, ''அவற்றோடு நடந்து செல்ல அமைந்த
முறையை நான் அறிகிலேன்'' என்று மறுத்து விட்டு அகன்றான்.
|