இசுரவேலர்
ஆரவாரித்த ஓசையை அரக்கனாகிய கோலியாற்று
கேட்டு, இன்று போருக்கு எதிர் வருவதாகக் கண்ட சிறுவனைப் பழித்த
வண்ணம் எழுந்து, யாவரும் அஞ்சுமாறு கூர்மையான வேலோடு அணுகி
வந்து, பரந்த கருமேகத்தினின்று புறப்பட்டு வந்த கோடை காலத்துப்
பேரிடி போல முழங்கிச் சொல்லலானான்:
'இன்று' என்றது,
'என்றும் போல் இல்லாமல் இன்று' என்ற பொருள்
கருதியது. கோடையிடியின் முழக்கம் பெரிதாதலின் 'பேரிடி' எனப்பட்டது.
எழுந்து + யாவரும் - எழுந்தியாவரும்: யகரமெய்முன் குற்றியலுகரம்
இகரமாயிற்று.
27 |
நீய
டாவெதிர் நிற்பதோ மதம் பொழி கரிமே
னாய டாவினை நடத்துமோ கதங்கொடு நானே
வாய டாபிளந் துயிர்ப்பிட மறுகிநீ நுண்டூ
ளாய டாவுல கப்புறத் தேகுவா யென்றான். |
|
"நீ,
அடா, எதிர் நிற்பதோ? மதம் பொழி கரி மேல்
நாய், அடா, வினை நடத்துமோ? கதம் கொடு நானே
வாய், அடா, பிளந்து உயிர்ப்பு இட மறுகி நீ நுண் தூள்
ஆய், அடா, உலகு அப்புறத்து ஏகுவாய்!" என்றான். |
"அடே! நீ
என் எதிரே நிற்கவுங் கூடுமோ? நாய் நின்று, மதம்
பொழியும் யானையை எதிர்த்துப் போர்வினை நடத்துமோ, டா! அடே!
சினங்கொண்டு நான் வாய் திறந்து மூச்சு விடவும், அடே! நீ சுழன்று,
நுண்ணிய தூளாய்ப் பொடிந்து, இவ்வுலகிற்கு அப்புறமுள்ள மறுவுலகிற்கே
சென்று விடுவாய், அடா!" என்றான்.
அடன், அடி என்பன
ஆண்பால் பெண்பால் விளி இடைச் சொற்கள்.
அடன் என்பது, அடா, அடே என நின்று விளி கொள்ளும். டா என்பது
அடா என்பதன் மரூஉ. அடி என்பது அப்படியே நின்று விளி ஏற்பதும்,
அடியே என்பதுபோல் விரிந்து நின்று விளி ஏற்பதும் உண்டு. இவ்விடைச்
சொற்கள் பெயர்ச் சொற்களாக நிற்றலும், பிற வேற்றுமை உருபுகளை
ஏற்றலும் இல்லை.
28 |
வெல்வை
வேல்செயு மிடலதுன் மிடலடா நானோ
வெல்வை யாதர வியற்றெதி ரிலாத்திறக் கடவுள்
வல்கை யோடுனை மாய்த்துடல் புட்கிரை யாக
வொல்செய் வேனெனா வுடைகவண் சுழற்றின
னிளையோன். |
|