பக்கம் எண் :

முதற் காண்டம்128

                45
கொலைமுகந் தழன்றவேற் கொற்றத் தாவிதன்
றலைமுகந் தொழுகிய குலஞ்ச கோபவன்
சிலைமுகந் தவிந்நுதற் றேவி நீப்பியின்
பலைமுகந் துவந்துசூ லணிந்து ளோங்கினாள்.
 
கொலை முகந்து அழன்ற வேல் கொற்றத் தாவிதன்
தலை முகந்து ஒழுகிய குலம் சகோபு அவன்
சிலை முகந்து அவிர் நுதல் தேவி நீப்பி இன்பு
அலை முகந்து உவந்து சூல் அணிந்து உள் ஓங்கினாள்.

     கொலைகளை அள்ளிக்கொண்டு கொதித்த வேலின் வெற்றி படைத்த
தாவிதனைத் தலையாகக் கொண்டு தொடர்ந்துவந்த குலத்தில் வந்தவன்
சகோபு என்பவன். அவன் மனைவி வில்லின் வடிவங் கொண்டு ஒளிரும்
நெற்றியை உடைய நீப்பி என்பவள். அவள் இன்ப அலையில் மூழ்கி
மகிழ்ந்து கருப்பம் கொண்டு உள்ளத்தில் எழுச்சி கொண்டாள்.
 
                46
மணிபழித் தருங்கவின் மங்கை யுள்ளுவந்
தணிபழித் தணிந்தநற் கருப்ப மாயகால்
பிணிபழித் துறுநயம் பெருகி மேலெழீஇப்
பணி பழித் தொளிமுகம் பொறித்த பான்மையே.
 
மணி பழித்து அருங் கவின் மங்கை உள் உவந்து,
அணி பழித்து அணிந்த நல் கருப்பம் ஆய கால்,
பிணி பழித்து உறு நயம் பெருகி மேல் எழீஇ,
பணி பழித்து ஒளி முகம் பொறித்த பான்மையே.

     மணிகளைப் பழித்து அரிய அழகு கொண்ட நீப்பி என்னும் மங்கை,
உள்ளம் மகிழ்ந்து, அணிகலன்களைப் பழித்ததுபோல அணிந்த நல்ல
கருப்பம் உற்றாள். அப்பொழுது கருப்பத்தால் வரும் துன்பத்தையெல்லாம்
பழித்து மிக்க இன்பம் பெருகி மேல் எழுந்தது. அணிகலன்களைப் பழித்து
ஒளிகொண்ட அவளது முகம் சித்திரமாகத் தீட்டிய தன்மையாய் விளங்கிற்று.