பக்கம் எண் :

முதற் காண்டம்130

பிறை வளரும் அழகுபோல் வளர்ந்த கருப்பத்தைக் கொண்டுள்ள
சிறைபோல் அமைந்த உடலினுள் செலுத்தினான்.

     'அரோ' அசைநிலை, கருவிலுள்ள சூசையின் உறுப்புகளுக்கு அறை
வீடுகளும், உடலுக்கு மாளிகையும், உயிருக்கு அரசனும் உவமை.
 
              49
வாய்வழி பரவிய நஞ்சின் வண்ணமே
காய்வழி யாதன்முன் கனிந்த ருந்திய
தீய்வழி கருவழி சேருந் தொற்செயி
ரோய்வழி பொறாதிறை யொழிய முன்னினான்.
 
வாய் வழி பரவிய நஞ்சின் வண்ணமே,
காய் வழி ஆதன் முன் கனிந்து அருந்திய
தீய் வழி, கரு வழி சேரும் தொல் செயிர்
ஓய் வழி பொறாது, இறை ஒழிய முன்னினான்.

     வாய் வழியே சென்று உடலெல்லாம் பரவிய நஞ்சினைப்போல்
விலக்கப்பட்ட கனியின் வழியாக முன் படைப்புக் காலத்தில் மனித இன
முதல்வனான ஆதன் மனம் இசைந்து அருந்திய பாவத்தின் வழியாக,
மானிடர் அனைவர்க்கும் கருப்பத்தின் வழியாக வந்து சேரும் பழைய
பாவம், திருமகனின் பாடுகளின் பயனாக ஓயும் வழி ஏற்படும் வரையில்
பொறுத்திராது, அப்பொழுதே வளனுக்கு ஒழித்துவிட ஆண்டவன்
நினைத்தான்.

     பழைய பாவம் - சன்மப் பாவம். ஆதன் கனி அருந்தியதும், அதன்
வழியாக வந்த தொல் செயிரும் பற்றி 27-வது ஞாபகப் படலம், 108 - 121
பாடல்கள் மூலம் அறிக, தீய் - தீ: தீமை வாய்வழி சென்று உடலெல்லாம்
பரவும் நஞ்சின் உவமை வரும் பிற இடங்கள்: 5. 2; 27. 121.

                  50
புரப்பவோர் பொதுமுறை பொறாத தன்மையாற்
கருப்பமோ ரெழுமதி கடக்கு முன்வினை
பரிப்பவோர் சிறப்பருட் பயத்திற் சூற்செயிர்
விருப்பமோ டிறையவன் விலக்கி னானரோ.