பக்கம் எண் :

முதற் காண்டம்132

     தேனைத் தன்னிடத்து மறைத்த கருப்பமாகச் செறித்த சிறப்போடு
வாசனையையும் உள்ளே புதைத்து வைத்திருந்து பின் இரண்டும் புலப்பட
விரியும் தாமரை மலர் போல, அத்தாயும் தனது கருப்பத்திடமாய்
மறைந்து கிடந்த சிறப்புகளின் மிகுதி உள்ளடங்கமாட்டாது வெளிப்படவே,
தானும் அவ்வொளி முகமெல்லாம் மூட ஒளிர்ந்து விளங்குவாள்.

     'அரோ' அசை நிலை.

                 தேம்பாவணியாய்ப் பிறந்த மகன்

     -மா, - -காய், -மா, -மா, - -காய்
 
                    53    
சொல்லார் நிகர்கெடவோர் வனப்பிற் பைம்பொற் சூன்முற்றி
யல்லா ரிருள்கெடமீ முளைத்த திங்க ளணிமணிபோ
லெல்லார் முகத்திலங்கிப் பிறந்த தோன்ற லெழிற்கண்டு
பல்லா ருடைமம்மர் கெடத்தா யின்பப் பயன்கொண்டாள்.
 
சொல் ஆர் நிகர் கெட ஓர் வனப்பின் பைம் பொன் சூல் முற்றி,
அல் ஆர் இருள் கெட மீ முளைத்த திங்கள் அணி மணி போல்
எல் ஆர் முகத்து இலங்கிப் பிறந்த தோன்றல் எழில் கண்டு,
பல்லார் உடை மம்மர் கெட, தாய் இன்பப் பயன் கொண்டாள்.

     சொற்களில் நிறைந்த ஒப்புமையெல்லாம் கெடத்தக்கதோர் அழகோடு
பசும் பொன் போன்ற கருப்பம் முதிர்ந்து, இரவில் நிறைந்துள்ள இருள்
கெடுமாறு மேல் வானத்தில் தோன்றிய சந்திரன் கொண்ட அழகுபோல்
ஒளி நிறைந்த முகத்தோடு விளங்கிப் பிறந்த மகனின் அழகைக் கண்டு,
பலரும் கொண்டிருந்த துன்ப மயக்கமெல்லாம் கெட, தாயாகிய நீப்பி
இன்பப் பயனை அடைந்தாள்.

     தானும் பிறரும் பெற்ற இருவகை இன்பப் பயன், பெற்ற தாயாதலின்,
அவளுக்கு உரிமை ஆயின.