பக்கம் எண் :

முதற் காண்டம்136

கூம்பா அணி மகற்குக் கணிதம் மிக்கோர் கூறு புகழ்
ஓம்பா அணி ஆக அனைத்தும் நீக்கி, "ஒருங்கு உடன் ஓர்
சாம்பா அணி ஆக இரங்கி எந்தை தான் புகழ்ந்த
தேம்பாவணியே!" என்று, அணி மிக்கு அம் பூண் சேர்த்தினரே.

     சுருங்குதல் இல்லாத அழகுள்ள அம் மகனுக்குச் சோதிடக் கணித
அறிவுமிக்கோர் கூறும் புகழெல்லாம் பேண வேண்டாத அழகென்று
விலக்கிவிட்டு, "புகழெல்லாம் ஒருங்கு கூட்டி எம் தந்தையாகிய
ஆண்டவனே இரக்கங்கொண்டு ஒப்பற்ற வாடாத மாலை என்று புகழ்ந்த
தேம்பாவணியே!" என்று புகழ்ந்து, அங்குக் கூடி நின்றோர் அக்குழந்தையின்
அழகு மிகுமாறு அழகிய அணிகலன்களைஅணிவித்தனர்.

     இறைவன் கூறிய புகழுக்குமேல் எப்புகழும் வேண்டுவதென்று என்பது
கருத்து. அதுவே சோதிடர் கூறும் புகழ் நம்பத்தக்கதன்று என்று
மறைமுகமாகக் குறித்ததும் ஆம். தெய்வக் குரலும் மானிடர் குரலும்
இணைந்து கூறிய 'தேம்பாவணி', இவ்வாறு காப்பியத் தலைவனுக்கும்
காப்பியத்திற்கும் பெயராய் அமைகின்றது.
 
                    60  
செய்வாய் வானுடுசூழ் குழவித் திங்கட் சீர்பொருவப்
பெய்வாய்க் கிண்கிணியுஞ் சிலம்பு மார்ப்பப் பெய்துசுடர்
வைவாய் மணியாழி யிட்டுப் பைம்பூ மலர்கிடத்தி
மொய்வாய்க் கடலுலகிற் றிலத மென்பார் முகங்கண்டார்.
 
செய் வாய் வான் உடு சூழ் குழவித் திங்கட் சீர் பொருவ,
பெய் வாய்க் கிண்கிணியும் சிலம்பும் ஆர்ப்பப் பெய்து, சுடர்
வை வாய் மணி ஆழி இட்டு, பைம் பூ மலர் கிடத்தி,
"மொய் வாய்க் கடல் உலகின் திலதம்", என்பார்

     முகம் கண்டார். செந்நிறம் பொருந்திய வானத்தில் விண்மீன்கள்
சூழ்ந்துள்ள பிறைச் சந்திரனின் சிறப்பிற்கு ஒப்பாக அக்குழந்தையின் முகம்
விளங்கக் கண்டு நின்றோர், மணிகள் உள்ளே இட்டு வைத்த சதங்கையும்
சிலம்பும் ஒலிக்குமாறு கால்களில் அணிவித்து, பதித்து வைத்த ஒளி
பொருந்திய இரத்தின மோதிரத்தை விரலில் இட்டு, பசுமையான அழகிய
மலர் மெத்தையில் கிடத்தி, "அலைகள் திரண்ட கடல் சூழ்ந்த உலகிற்கு
இவனே ஒரு திலகம் ஆவான்", என்று போற்றுவர்.