பக்கம் எண் :

முதற் காண்டம்137

                      61
வான்மேல் வைத்தசுடர் கிடக்கும் வண்ண வடிவெண்பார்
கான்மேல் வைத்ததவ மினிநன் றிங்கட் காட்டுமென்பார்
நூன்மேல் வைத்தமறை விளக்கு நன்மாண் சுடரென்பார்
நான்மேல் வைத்தபுகழ் விள்ளார் கொண்ட நயம்விள்ளார்.
 
"வான் மேல் வைத்த சுடர் கிடக்கும் வண்ண வடிவு", என்பார்.
"கான் மேல் வைத்த தவம் இனி நன்று இங்கண் காட்டும்", என்பார்.
"நூல் மேல் வைத்த மறை விளக்கும் நுண் மாண் சுடர்", என்பார்.
நால் மேல் வைத்த புகழ் விள்ளார்; கொண்ட நயம் விள்ளார்.

     சூழ நின்றோர் சிலர், "வானத்தின் மேல் உள்ள கதிரவன் இம்
மண்ணுலகில் வந்து கிடக்கும் அழகிய வடிவமே இக் குழந்தை", என்பர்.
வேறு சிலர், "காட்டில் பொருந்த நின்ற தவத்தை இவன் இனி நாடாகிய
இங்கே பொருந்தக் காட்டுவான்", என்பர். இன்னும் சிலர்,
"நூல்களுக்கெல்லாம் மேலாக வைக்கப்பட்டுள்ள வேதத்தை விளக்கிக்
காட்டும் நுண்ணிய மாண்புள்ள சுடர் விளக்கே இம்மகன்", என்பர்.
இவ்வாறு நான்கு வகைக்கும் மேலாக வைத்து எண்ணப்பட்ட
புகழ்ச்சிகளைச் சொல்லுதல் தவிரார்; கொண்ட இன்பத்தைச் சொல்ல
இயலாதவரும் ஆயினார்.

             வளன் சனித்த படலம் முற்றும்.

              ஆகப் படலம் 3க்குப் பாடல் 227.